இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரபு என பலர் நடிக்கும் இப்படத்தில் இன்னும் முக்கியமான சில நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கிறார்கள் என அவர்களின் பெயர்கள் ஆரம்பத்தில் அடிபட்டது. ஆனால் பின்னர் அவர்கள் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.
அவர்களில் முக்கியமானவர்கள் அனுஷ்கா, அமலாபால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஆவர். இவர்களில் அமலாபால் ஏன் அப்படத்தில் இருந்து விலகினேன் என்று தற்போது வாய் திறந்திருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது, “அப்படத்தில் எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் எனக்கு ஒட்டாத கதாபாத்திரமாக இருந்தது. அப்படத்தில் என்னால் நியாயமாக நடித்திருக்க முடியாது. அதனால் தான் படத்தில் இருந்து விலகினேன். இருப்பினும் வரும் காலத்தில் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.