வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் வழியைப் பின் பற்றும் ஹீரோ கத்தியைத் தூக்குகிறார். அதற்கான காரணமும் அக்காரணத்தில் உள்ள மனிதமும் தான் ஒன்லைன்
நல்ல சம்பளம், நல்ல அம்மா தங்கை என வாழும் ஹீரோ விஜய் கனிஷ்கா வெஜிடேரியன் உண்டு உடல் வளர்க்கும் ஐடியாக்களை ஒரு App-ல் கொண்டு வருகிறார். கொல்லாமை வலியிறுத்தும் ஹீரோவின் அம்மாவையும் தங்கையையும் முகத்தை மறைத்துத் திரியும் ஒரு வில்லன் கடத்திச் செல்கிறார். அதற்கான காரணம் என்ன? விஜய் கனிஷ்கா அம்மாவையும் தங்கையும் காப்பாற்றினாரா? இதில் சரத்குமாரின் ரோல்ப்ளே என்ன? அந்த மாஸ்க்மேன் யார்? என்பதே படத்தின் திரைக்கதை
அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா அளவாக நடிக்கிறார். எமோஷ்னல் காட்சிகளிலும் வரும் நாட்களில் இன்னும் நன்றாக நடித்து ஸ்கோர் பண்ணுவார் என்று நம்பலாம்..அதற்கான டெப்த் அவரிடம் இருக்கிறது. சரத்குமார் ஹீரோவுக்கு சப்போர்ட்டாக வரும் ஹீரோ. அவர் வரும் காட்சிகளில் அவர் படத்தை தன்னகத்தே கொண்டு வந்துவிடுகிறார். அம்மாவாக வரும் சித்தாரா, தங்கையாக வரும் அபி, முனிஷ்காந்த், சமுத்திரக்கனி, பால சரவணன், கெளதம்மெனன், கிங்ஸ்ட்லி, லதா ராவ் என படத்தில் நிறைய கேரக்டர்கள் இருக்கிறார்கள்
படத்தில் இசை ஒரு கேரக்டர் போலவே வருகிறது. சில இடங்களில் ஓவர் டோஸ் ஆக இருந்தாலும் பல இடங்களில் ஓகே வாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தனது வேலையில் பெரிதாக குறை வைக்கவில்லை.
மிக மெல்லியதாக துவங்கும் படம், 15-ஆவது நிமிடத்தில் திரில்லர் மோட்-க்கு மாறுகிறது. அதன்பின் படம் பரபரவென பறக்கிறது. படத்தின் வேகமும் விவேகமும் ரசிக்க வைத்தாலும், துளியும் லாஜிக்-அற்ற காட்சிகளும், ஒட்டாத எமோஷ்னலும் படத்தோடு ஒன்ற முடியாமல் செய்துவிடுகிறது. இருப்பினும் படத்தை உயிர்ப்போடு வைத்திருப்பது ஸ்மிருதி வெங்கட் வரும் அந்த ப்ளாஸ்பேக் காட்சிகள். ‘பிற உயிரை தன்னுயிர் போல் நினைக்க வேண்டும்’
என்று மனிதம் பேசிய அந்தக் காட்சிகள் நம் மனதை உலுக்குபவை.
விஜய் முதற்கொண்டு நிறைய நடிகர்களுக்கு நல்ல விசிட்டிங்கார்ட் கொடுத்த இயக்குநர் விக்ரமன் தன் மகனை நாயகனாக்கி உள்ளார். இன்னும் காலம் இருக்கிறது..அடுத்தடுத்து தேர்ந்த திரைக்கதை உள்ள படங்களில் நடித்து அவர் பேர் பெறுவார் என வாழ்த்துவோம். இந்த ஹிட் லிஸ்ட் கமர்சியலாக கை கொடுக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கருத்தியலாக வொர்த்து. அந்த ஒரு பாயிண்ட்க்காக இப்படத்தைப் பார்க்கலாம்
3/5
,-மு.ஜெகன் கவிராஜ்