Tamil Movie Ads News and Videos Portal

ஹர்காரா- விமர்சனம்

 

“இந்தத் தபால்காரன் கூட பராவாயில்லை யாருக்கோ வந்த கடிதத்தை என்னிடம் தந்துவிட்டுப் போகிறான்” என்ற கவிதையை மூ.மேத்தா எழுதியிருப்பார். 80, 90 களில் தபால்காரரைப் பற்றி கவிதைகள் கதைகள் வெளி வந்துகொண்டிருந்தன. அந்தளவிற்கு தபால்காரர்கள் மக்களின் வாழ்வோடு பின்னப்பட்டிருந்தார்கள். ஹர்காரா என்றால் தபால்காரர் என்று அர்த்தம். அப்படியான தபால்காரரைப் பற்றி பேசியிருக்கும் படமே ஹர்காரா

தேனி மாவட்டம் ஒரு மலைக்கிராமத்தில் தபால்காரராக பணியாற்ற வருகிறார் காளிவெங்கட். அந்த ஊரில் வேலை செய்ய விருப்பமில்லாத அவர், ஒரு கட்டத்தில் இந்த ஊருக்கு தபால்நிலையமே தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறார். அதற்காக கலெக்டருக்கு தகவலும் அனுப்புகிறார். இந்த நேரத்தில் ஒரு வயதானவர் இந்த ஊரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தபால் காரர் செய்த விசயத்தைச் சொல்கிறார். அந்த விசயம் என்ன என்பதாக கதை விரிகிறது

ராம் அருண் எதார்த்த நடிப்பை வழங்கியுள்ளார் . காளிவெங்கட் கதையின் நாயகனாக ஜொலிக்கிறார். ஒரு தபால்காரரின் உடல்மொழியை தனக்குள்ளே வைத்து அசரடித்துள்ளார். அவர் உள்ளிட்ட அனைவருமே சிறந்த நடிப்பை கொடுத்துள்ளனர்

கதையின் தன்மையை உள்வாங்கி உழைத்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவும் படத்தை ஒளிரச்செய்கிறது. கொஞ்சம் ஸ்லோவான படத்தை எடிட்டர் இன்னும் எபெக்ட் போட்டு மெருகேற்றியிருக்கலாம்

மிகச்சிறப்பான ஒரு லைனைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். பல புது முயற்சிகள் படத்தில் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் இன்னும் தேர்ந்த திரைக்கதையோடு அணுகியிருக்கலாம். மிக மெதுவான கதை சொல்லலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஹர்கராவிற்கு ஹார்ட்டீன் விடலாம்
3/5
-மு.ஜெகன் கவிராஜ்