பாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி வெற்றிபெற்றத் திரைப்படம் “விக்கி டோனார்”. இது விந்து தானம் செய்வதன் மூலம் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கச் செய்யும் முறையை அடிப்படையாகக் கொண்டு உருவான படம். தமிழிலும் தற்போது அது போல் ஒரு திரைப்படம் உருவாகவிருக்கிறது. இதில் நாயகனாக வில் அம்பு, ப்யார் ப்ரேமா காதல் படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் இப்படத்திற்கு “தாராள பிரபு” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் விந்து தானம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் ஹரிஷ் கூறும் போது, “இப்படத்தில் நடித்தால் இமேஜ் போய்விடும் என்று நண்பர்கள் பயமுறுத்தினார்கள். ஆனால் இது சமூகத்திற்கு தேவையான விசயம் என்பதால் துணிந்து நடிக்கிறேன்.” என்று கூறியிருக்கிறார்.