Tamil Movie Ads News and Videos Portal

கை தட்டுவதையும்; டாக்டர்களை வெளியேற்றுவதையும் நிறுத்துங்கள்

சென்ற ஞாயிறு அன்று கொரோனாவை எதிர்த்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் வகையில் மாலை 5 மணியளவில் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடி கரவொலி எழுப்பியோ மணியோசை எழுப்பியோ நன்றி செலுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி மக்களும் அவர்களின் நன்றியை ஆத்மார்த்தமாக தெரிவித்தனர். இது போன்ற செயல்களை நினைத்து நாம் சந்தோஷப்படும் அதே நேரத்தில் தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலுங்கானாவில் மருத்துவர் பணியாற்றும் ஒருவரின் முகநூல் பதிவு சொல்வது இதுதான். “எங்கள் வீட்டின் உரிமையாளர் என் மூலமாக அவருக்கு கொரோனா தொற்று வந்துவிடுமோ என்கின்ற பயத்தில் எங்களை வீட்டைக் காலி செய்யச் சொல்லி வருகிறார். மருத்துவமனையில் இருக்கும் ஹாஸ்டல் பகுதிகளைக் கூட படுக்கைகளாக மாற்றி விட்டதால், ஓய்வு எடுக்கக் கூட இடமில்லாமல் தவித்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை வீட்டை காலி செய்யச் சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். எனக்கு மட்டும் இந்த நிலை இல்லை. என் போன்ற பல மருத்துவர்களுக்கும் இதே நிலை தான்” என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை இயக்குநர் விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார். மக்கள் மருத்துவர்களுக்காக கை தட்டுவதையும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும் நிறுத்திவிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை தக்கபடி கடைபிடிப்பது ஒன்றே தற்போதைய சூழலில் அவர்கள் மனிதத்துடன் மேற்கொள்ள வேண்டிய செயலாகும்.