ஒரு தேர்ந்த கலைப்படைப்பில் அரசியல் இருந்தால் கரும்புச் சாரோடு மருந்தை உண்ட பீல் கிடைக்கும். படைப்பில் முழுக்க முழுக்க அரசியலை வைத்துவிட்டு கலையை தம்மாத்துண்டுச் சேர்த்தால் மருந்து ரொம்பவே கசக்கும். ஜிப்ஸி தேர்ந்த கலையாக்கமாகவும் இல்லை. வீரியமான அரசியல் படமாகவும் இல்லை.
அன்பாயுதம் தான் மனிதனின் பேராயுதம் என்பதை இறுதியில் சொல்ல வருகிறார் தோழர் ராஜுமுருகன். மேலும் மதவெறியை எளிய மக்களுக்குள் ஏற்றும் மதவாதிகளுக்கு அதிகாரம் மீதுதான் பற்றே தவிர தங்கள் மதம் மீது பற்று இல்லை. மேலும் ஏவி விட்டதும் தோளில் கைபோட்டு பழகிய சக மனிதனையே தோலை உரிக்கும் அந்த மாதவெறி ஏற்றப்பட்ட மக்கள் மீதும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை நச்சென்று சித்தரித்துள்ளார் ராஜு.
தேசாந்திரியாக வாழும் ஜீவாவுக்கு முஸ்லிம் மத நெறிகளை மிகச்சரியாக கடைப்பிடித்து வாழும் நடாஷா மீது காதல் வருகிறது. நடாஷாவுக்கும் வருகிறது. இருவரும் நாகூர் விட்டு வெளியேறி இல்லறம் காண்கிறார்கள். ஒரு மதக்கலவரம் இருவரையும் பிரித்து விட அடுத்து இருவரும் சேர்ந்தார்களா என்பதை உருக்கி உருக்கிச் சொல்லாமல் சறுக்கி சறுக்கி சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
ஜீவாவின் தேர்ந்த நடிப்பு மெச்சத்தக்கது. நடாஷாவின் பேரழகும் நடிப்பும் கூட சிறப்பு. செல்வகுமாரின் ஒளிப்பதிவில் கண்கள் பேராச்சர்யம் அடைகின்றன. சந்தோஷ் நாராயணனின் இசையில் இரைச்சலும் காப்பி பேஸ்ட்டும் அதிகம் என்பது வருத்தமான உண்மை. பொங்கியெழ வைக்கும் இரண்டு இடங்களில் காலத்தால் அழியாதப் பாடலைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்தப் பாடகல்கள் தேமே என்று கடந்து போகின்றன
வீட்டை விட்டு வெளியுலகத்தைக் காண முடியாமல் அடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு ஒரு தேசாந்திரியைப் பார்த்ததும் ஈர்ப்பு வருவது இயல்பு தான்! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உளவியல் உண்மை தான். ஆனால் அந்த இடத்தில் நாயகியின் பகுத்தறிவு எப்படி வேலை செய்யாமல் போனது. கண்டிப்புடன் வளர்க்கும் முஸ்லிம் அப்பா ஒன்றும் அவ்வளவு கொடூரமானவர் அல்லவே? இடைவேளைக்குப் பிறகு ஜீவா ஒரு புரட்சிப் பாடகர் என்று வழிமொழியப் படுகிறார். அதற்கு லீட் முன்பாதியில் மருந்துக்குக் கூட இல்லை. காசு கொடுத்தால் எங்கும் பாடுவேன் என்ற வறட்சிப் பாடகராகத் தான் ஜீவா திரிகிறார்.
சிறுபான்மையினரின் மனநிலையை சொல்கிறேன் பேர்விழி என்று ஒரு இடத்தில் ஜீவா, “அதான் கிரிக்கெட்ல பாகிஸ்தான் ஜெயிச்சுடுமே ஏன் கவலைப் படுறே” என்று கேட்கிறார். ஜீவா போல்தான் எல்லா மக்களின் மனதிற்குள்ளும் முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் ஜெயித்தால் தான் சந்தோஷம் என்பதை கட்டமைக்கிறாரா இயக்குநர்? அப்படி இருந்தால் அது அறமா?
சென்சாரில் படம் துண்டாடப்பட்டுள்ளதை ஆங்காங்கே உணரமுடிகிறது. ஆனாலும் கொண்டாட வேண்டிய படைப்பைத் தர ராஜுமுருகன் தவறிவிட்டார் என்பதே சுடும் உண்மை.
இருந்தும் படத்தில் மனதை கவரும் அம்சங்கள் நிறைய உள்ளது. குறிப்பாக கலவரத்தில் பாதிக்கப்பட்ட நடாஷாவும் பாதிப்பை ஏற்படுத்திய வில்லனும் ஒரே மேடையில் அன்பை வெளிப்படுத்தும் காட்சி அட்டகாசம். ஜிப்ஸி தவறான படம் என்று சொல்ல முடியாது. அதேபோல் தவறவிடக்கூடாத படம் என்றும் சொல்ல முடியாது!
-மு.ஜெகன்சேட்