கொரோனா தாக்கத்தால் உலகமே ஒடுங்கிப் போயிருக்கும் இந்த அசாதாரண சூழலில் அடுத்ததாக நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சவாலானது, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை தான். நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவு பணியாளர்கள் என தொற்று பாதிப்பிற்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமிருக்கும் இது போன்ற நபர்களுக்கு முகக்கவசம், கையுறைகள், பாதுகாப்பு ஆடைகள் போன்றவை தேவைக்கேற்ற அளவில் நம்மிடையே இல்லை.மேலும் பொதுமக்கள் பலரும் முகக்கவசங்களை தங்கள் தேவைக்காக வாங்கி பதுக்கி வைக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் முகக்கவசம் போன்ற பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, “தொற்று பாதிப்பிற்கு அதிக வாய்ப்பு இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புறவு பணியாளர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என முக்கியமானவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கும் வகையில் பொதுமக்கள அவற்றை விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். ஏனென்றால் அவை நம்மிடம் தற்போது போதிய எண்ணிக்கையில் இல்லை; ஆனால் அவற்றின் உற்பத்தியை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. அதனால் நமக்கும் அவை விரைவில் போதுமான அளவிற்கு கிடைக்கும் அதுவரை நாம் மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்காக அவற்றை விட்டுக் கொடுப்போம்” என்று கூறியுள்ளார்.