‘மாஸ்டர்’ இசை வெளியீட்டு மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “கடவுளை கடவுள் காப்பாத்திக் கொள்வார். அவரை யாரும் காப்பாற்ற வேண்டியது இல்லை. மனிதனைத் தான் மனிதன் காப்பாற்ற வேண்டும். ஒருவர் உங்களிடம் எனது மதத்தில் இப்படி எல்லாம் இருக்கிறது என்று பெருமையாக சொன்னால், அவருடன் போட்டி போட்டுக் கொண்டு, உங்கள் மதத்தில் இருக்கும் நல்ல விசயங்களை பட்டியலிடாதீர்கள். அதற்குப் பதில் மனிதம் மற்றும் மனிதநேயத்தைக் கற்றுக் கொடுங்கள் என்று பேசியிருந்தார்.
இதற்கு பதில் கூறுவது போல் பா.ஜ.க கட்சியின் பிரமுகரான நடிகை காயத்ரி ரகுராம் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், “மனிதனை நம்புவதற்க் வாழ்த்துகள் நண்பா, ஒருவருக்கு மனிதன் மூலம் தான் வெற்றி கிடைக்கும் என்று நம்புவது தவறு. உங்களுடைய வாழ்க்கையே கடவுள் கையில் தான் இருக்கிறது. எளிதில் பொய் சொல்லக்கூடிய, வெறுக்கக்கூடிய மனிதனை நான் நம்பமாட்டேன். கடவுளைத் தான் நம்புவேன். எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கான நம்பிக்கைகள் இருக்கின்றன. நாங்கள் வாயை மூடிக் கொண்டு ஊமை போல் இருப்போம் என்று நினைத்திருந்தால் ஸாரி” என்று பதிவிட்டுள்ளார். சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைக் கொண்டு தெளிவற்ற பதிவை வெளியிட்டு இருக்கும் காயத்ரி ரகுராமைப் பார்த்து இவர் ஏன் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.