தந்தைக் குருவியை காப்பாற்ற, பிள்ளைக்குருவி எப்படியான கருவிகளை எல்லாம் எடுத்து போரிடுகிறது என்பதே கார்கியின் கதை
சாய் பல்லவியின் தந்தைமீது ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றம் சுமத்தப்படுகிறது. அந்தக் குற்றம் உண்மையல்ல என நிரூபிக்க சாய்பல்லவி எடுக்கும் பிரயத்தனங்களே கார்கியின் கதை
டான்ஸ் குயினான சாய்பல்லவி இந்தப்படத்தில் எடுத்திருப்பது வேறலெவல் அவதாரம். கண்கள், குரல், முகபாவம் என தந்தைக்காக உருகும் மகளாக வாழ்ந்திருக்கிறார். இந்த வருடம் விருதுகள் லிஸ்டில் நிச்சயமாக சாய்பல்லவி இருப்பார். அதற்கடுத்து ஒரு ஹீரோ போல படத்தில் மிளிர்கிறார் காளிவெங்கட். அவரின் சிறந்த நடிப்பிற்கு இந்தப்படம் நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறது. கிடைத்திருக்கும் வாய்ப்பை வாரியணைத்திருக்கிறார் காளிவெங்கட். சிவாஜீ கேரக்டர் வடிவம் சிறப்பு. லிவிங்ஸ்டன், சரவணன் இருவருக்கும் தேர்ந்த நடிப்பு. திருநங்கை நீதிபதியாக வரும் சுதா பெண்டாஸ்டிக் பெர்பாமன்ஸ்.
கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை சிறப்பான காட்சிகளை மேலும் சிறப்பாக்குகிறது. ஒளிப்பதிவும் படத்தில் லைவாக அமைந்து கதையை நெஞ்சுக்கு நெருக்கமாக மாற்றியுள்ளது
ஒரு குற்றம் அதைத் தொடர்ந்து விரியும் விசாரணை. விசாரணையில் துலங்கும் பிரச்சனைகள், பிரச்சினைகளில் உள்ள அழுத்தம் என இப்படத்தின் திரைக்கதை அட்டகாசமாக பயணிக்கிறது. காட்சிக்கு காட்சி அப்ளாஸ் அள்ளும் வசனங்களும் படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது
பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு யார் மூலமாகவும் வரலாம். நாம் கற்பனை கூட செய்திராத நபர்கள் கூட நம் வுமன்களுக்கு எமன்களாக இருக்கலாம் என்பதை உருக்கமாகச் சொல்லியிருக்கும் கார்கி படம் தான் இந்த வாரத்தின் வின்னர்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்