Tamil Movie Ads News and Videos Portal

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’ !

ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்’ கங்கணம் கட்டிக்கொண்டு’ நிற்பதாகச் சொல்வார்கள்.கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் .உள்ளே உள்ள பொருட்கள் தெரியாமல் அதன் மேல் மஞ்சள் துணியால் கட்டிக்கொள்வர்.இதைக் காப்பு என்றும் சொல்வார்கள் .இப்படிக் காப்பு கட்டி விட்டால் அவர்கள் நினைத்த காரியத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.எனவேதான் காரிய உறுதிபாட்டைக் கூறும் போது ‘கங்கணம் கட்டிக் கொள்வது’ என்று கூறுவார்கள்.

‘கங்கணம்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.இப்படத்தின் கதையில் கதாநாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை வில்லன் செய்து விடுகிறான். அது மட்டும் அல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரியையும் உச்சகட்ட அவமானப் படுத்தி விடுகிறான். அத்தோடு நிற்காமல் அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவன் பெரிய தொல்லை கொடுத்து வருகிறான்.அவர்களில் ஐந்து பேர் கொண்ட குழுவாக இணைந்து பழிவாங்கத் துடிக்கிறார்கள். இப்படிப் பாதிக்கப்பட்ட மூன்று தரப்பினருமே அவனை பழிவாங்க வேண்டும் என்று வெஞ்சினம் அதாவது கடும் கோபம் கொண்டு கங்கணம் கட்டிக்கொண்டு வைராக்கியமாக இருக்கிறார்கள். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பழிவாங்குதலின் மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘கங்கணம் ‘படத்தின் கதை.இப்படத்தை அ. இசையரசன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் கதையின் நாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகிகள் அஸ்வினி சந்திரசேகர் இவர் ஜீவி 2, டைட்டில் படங்களில் நடித்துள்ளவர். மற்றொரு நாயகி மூன்றாம் மனிதன்,குற்றச்சாட்டு,கிளாஸ்மேட் , படங்களில் நடித்தவர் பிரணா. முக்கிய கதாபாத்திரத்தில் சிரஞ்சன் நடித்துள்ளார்’ பருத்திவீரன் ‘ புகழ் கலைமாமணி சரவணன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

‘கங்கணம்’ படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றுள்ளது. மதுரை மேலூர், சென்னை, தேனி என்று பல்வேறுபட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் இந்த ‘கங்கணம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது .படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.