‘ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்’ தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, ‘சண்டிமுனி’ படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு ‘கங்காதேவி’ என பெயரிடப்பட்டுள்ளது.யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக ‘சூப்பர்’ சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள்.
‘காக்கா முட்டை’ பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.படம் பற்றி இயக்குநரிடம் கேட்டால், ”ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா – தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும். குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார். அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்!” என்றார்.