துல்கர் சல்மான் தான் தயாரித்து நடித்திருக்கும் ’வரனே அவ்ஷியமுண்டு’ படத்தினால் இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முதலில் மும்பை பெண் நிருபர் ஒருவரின் புகைப்படம் அனுமதியின்றி படத்தில் பயன்படுத்தப்பட்டு இருந்ததற்காக அந்த நிருபரிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது அப்படத்தில் சுரேஷ்கோபி வளர்க்கும் நாயின் பெயர் ‘பிரபாகரன்’ என்று இருப்பதால் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது, “நான் என் படங்கள் மற்றும் கருத்துகளின் மூலம் யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டவன் அல்ல. படத்தில் இடம் பெற்ற அந்தக் காட்சி எந்த உள்நோக்கமும் இன்றி எடுக்கப்பட்டது. அது ’பட்டண பிரவேஷம்’ என்னும் பழைய மலையாளத் திரைப்படத்தில் இடம் பெற்றக் காட்சி.
நீங்கள் என்னையோ, என் இயக்குநர் அனுப்பையோ திட்டுவதையும் வெறுப்பதையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் என் தந்தையையோ எங்கள் குடும்பத்தையோ திட்ட வேண்டாம். உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்தோடு திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம். என் படத்தினால் மன வருத்தம் அடைந்த தமிழ் மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.