டிரைலரிலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபர்ஹானா படமாக எப்படி வந்திருக்கிறது?
இஸ்லாமிய பெண்களின் பின்னணியில் கதை சொல்லும் படங்கள் தமிழில் இதுவரை பெரிதாக வெளியானதில்லை..அந்தக் குறையை நெல்சன் வெங்கடேசன் போக்கியுள்ளார். முழுக்க முழுக்க இஸ்லாமிய பெண்ணின் வாழ்வைச் சுற்றிப் பின்னப்பட்ட கதையிது
இஸ்லாமிய சட்டத்திட்டங்களை ரொம்பவும் கறாராக கடைபிடிக்கும் குடும்பத்தில் கணவன் மற்றும் குழந்தைகளோடு வாழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மத பாரம்பரியத்தைக் காரணம் காட்டி அவர் வேலைக்குச் செல்வதை வீட்டில் தடுத்தாலும் ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலைக்குச் செல்கிறார். அது ஒரு கால் சென்டர் நிறுவனம். அங்குள்ள சில பெண்கள் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். அதற்கான காரணம் அவர்கள் செக்ஸ்.டாட்காமில் ஆண்களோடு பேசும் வேலையைச் செய்கிறார்கள். ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் அந்த வேலையில் சேர்வதற்கான வாய்ப்பும் ஈர்ப்பும் வருகிறது. அதற்கடுத்து அவர் எடுக்கும் அதிரடி முடிவுகளே ஃபர்ஹானா படமாக விரிகிறது
தான் ஏற்கும் கதாப்பாத்திரத்தை என்றும் தோற்கவிடுவதில்லை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் தான் ஏற்ற கேரக்டருக்கும் முழு உயிர் கொடுத்து நடித்துள்ளார். அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் தான் படத்தை உயிர்ப்போடு நகர்த்துகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்துள்ள ஜித்தன் ரமேஷ் தரமாக நடித்துள்ளார். மதச்சடங்குகளை கடைபிடிக்கும் பழமைவாதியாக கிட்டியும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். சற்று நேரமே வரும் செல்வராகவன் கேரக்டர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை
ஜஸ்டின் பிரபாகரன் ஜஸ்ட் லைக் தட் ஆக நினைக்காமல் தனது பெஸ்டை இசையில் கொடுத்துள்ளார். பின்னணி இசை படத்தின் கதையோட்டத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. சென்னை ஐஸ்ஹவுஸ் ஏரியாவை கண்முன் நிறுத்தி ஆச்சர்யப்படுத்துகிறது கேமரா. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் உழைப்பு மெச்சத்தக்கது
உணர்வும் பழமையை உடைக்கும் திறப்பும் தான் இந்தக் கதையின் மெயின் மேட்டர். அதைச் சரியாக திரைக்கதை வாயிலாக கோர்த்துள்ளார் இயக்குநர். முன்பாதியில் படம் மெதுவாக பயணித்தாலும் , பின்பாதியில் சரியாகப் பயணித்து தடம் பதிக்கிறது படம்
ஃபர்ஹானா- நிறைவேறும் கனா
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#ஃபர்ஹானா #farhana