பெண்களின் உடலை வைத்து மெகா அயோக்கியத்தனம் செய்யும் அதிகார மட்ட வில்லனை…அடிமட்ட லெவலில் இறங்கி அடிக்கும் சூர்யாவின் நெத்தியடியே எதற்கும் துணிந்தவன்
படம் துவங்கும் முன்பே அனல் துவங்குகிறது தியேட்டரில். பெரும் கொண்டாட்டத்தோடு துவங்கும் படத்தை துவளவிடாமல் தாங்குகிறார்கள் சூர்யாவும் பிரியங்கா மோகனும். இரண்டுபேருக்குமான லவ் சீக்வென்ஸ் எல்லாமே மாஸ் மெட்டிரியல். சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களில் சீரியஸான சூர்யாவைப் பார்த்த நமக்கு இப்படத்தில் செம்ம சர்ப்ரைஸ்! கலகல சூர்யாவாக முன்பாதியில் துவம்சம் செய்கிறார். பிரியங்கா மோகன் அழகைப் போலவே நடிப்பிலும் டாப்டென் ஒன்! சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி, தீனா ஆகியோர்கள் பங்களிப்பும் சிறப்பு. வில்லனாக வெறித்தன முகம் காட்டியிருக்கும் வினய் படத்திற்கு பெருந்துணை!
டி.இமானின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. அன்பறிவு, ராம் லட்சுமண் ஆகியோரின் ஸ்டண்ட் கொரியோகிராபி அருமை. ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ப்ரேமும் தடதடக்கிறது
மற்றவர்கள் அய்யயோ நமக்கு இப்படி நடந்திடக்கூடாது என்று அஞ்சி ஒதுங்கும் விசயத்தை நமக்கு நடந்தால் நாம் எதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை சூர்யாவை வைத்து வீரியத்தோடு பேசியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜன். செண்டிமெண்ட் காட்சிகள் தூக்கி நிற்கும் இடங்களில் சில காமெடி காட்சிகள் துருத்தி நிற்பது தான் உறுத்தல். பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு பெண்கள் அஞ்சக்கூடாது என்ற அஞ்சாமை பாடம் தந்தமைக்காகவே எதற்கும் துணிந்தவனை தியேட்டரில் சென்று எதிர்கொள்ளலாம்
-மு.ஜெகன் கவிராஜ்