‘கும்கி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய ’தொடரி’ போன்ற படங்கள் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை. தற்போது அவர் மீண்டும் காடு சார்ந்த கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார். மூன்று மொழிகளில் தயாராகி வரும் இப்படத்திற்கு தமிழில் “காடன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் வெளியாகும் படம் என்பதால் மூன்று மொழிகளிலும் தெரிந்த நாயகன் வேண்டும் என்று முடிவு செய்து, விஷ்ணு விஷால், ராணா டகுபதி, புல்கிட் சாம்ராட் ஆகியோரை நடிக்க வைத்திருக்கின்றனர்.
படப்பிடிப்பு தாய்லாந்து, கேரளா மற்றும் அஸாம் காடுகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. படம் குறித்துப் பேசிய இயக்குநர் பிரபு சாலமன், “அஸாம் மாநிலத்தில் காட்டில் யானைகளின் வழித்தடங்கள் அழிக்கப்பட்ட போது, அதனால் மக்களுக்கும் யானைகளுக்கும் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் இப்படத்தின் ஒன்லைன். ராணா டகுபதி பாகுபலி படத்திற்காக உழைத்ததை விட பல மடங்கு சிரமத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்து இருக்கிறார். “ என்று தெரிவித்துள்ளார்.