அரசியல் என்றாலே கலெக்சன் என்றாகிவிட்ட சூழலில் இந்த எலக்சன் என்ன சொல்கிறது?
ஹீரோ விஜய்குமார் நல்லூரின் தங்கம். தன் அப்பாவின் அரசியல் நண்பரின் மகளை காதலிக்கிறார். இருவரின் காதலுக்கும் அப்பாவின் கட்சி விஸ்வாசம் குறுக்கே நிற்கிறது. அதனால் விஜய்குமார் காதல் தோல்வியில் முடிகிறது. அந்தத் தோல்விக்குப் பின்னால் நிறைய சூழ்ச்சிகளும் துரோகங்களும் வரிசை கட்டுகின்றன. தன் அப்பாவின் சுய மரியாதையைக் காக்க தேர்தலில் நிற்கிறார் ஹீரோ. தேர்தலுக்குப் பின் உள்ள நேர்மையற்ற தன்மையை படம் விளக்கியுள்ளது
உறியடி என்ற தன் முதல் படத்திலே அரசியல் நாயகனாக அவதாரம் எடுத்தவர் விஜய்குமார். இந்தப்படமும் அரசியல் களம் என்பதால் கதைக்குள் இயல்பாக பொருந்துகிறார். அவரது அக்காள் கணவர் கேரக்டரில் வரும் பவெல் நவகீதன் பின்னியிருக்கிறார். இயலாமையும் குற்றவுணர்ச்சியும், எகத்தாளமும், நட்பும் என அவர் படத்தில் எடுத்துள்ள அவதாரங்கள் அப்ளாஸ் மெட்டிரியல்ஸ். ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி இருவரும் ஓகே ரகம். திலீபனுக்கு இந்தப்படத்தில் மிகவும் கனமான கேரக்டர். சரியாக தாங்கியிருக்கிறார். ஜார்ஜ் மரியன் இன்னும் நேர்மையை மிச்சம் வைத்திருக்கும் ஒரு கடைக்கோடி தொண்டனை நினைவூட்டுகிறார்
உள்ளாட்சித் தேர்தலுக்கு என ஒரு மூட் இருக்கும். அதைச் சரியாக செட் செய்து இசைத்துள்ளார் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவில் எதார்த்தத்தை காட்டி ஈர்க்கிறார். எழுத்தாளர்& மற்றும் இயக்குநர் அழகிய பெரியவன், தமிழ், விஜய்குமார் என மூவரும் வசனம் எழுதியுள்ளனர். ஆழமான வசனங்கள் படத்தில் ஆங்காங்கே இருக்கின்றன.
கதைக்குள் சிறந்த விசயங்கள் பல இருக்கின்றன. வர்க்கம் ஜாதி என்பதை ஓட்டுப் போடும் நாள் வரைக்கும் பத்திரப்படுத்தும் அரசியல் வாதிகளை அழகாக திரையில் காட்டி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர் தமிழ். இளைஞர்கள் அரசியலில் வெற்றி தோல்வியை ஒருமுகமாக ஏற்று அரசியல் நடைபோட வேண்டும் என்றும் படம் பேசுகிறது. நல்ல நல்ல எதார்த்தங்களைப் பேசும் இந்த எலக்சனுக்கு மக்கள் நல்ல கலெக்சனை கொடுக்க வேண்டும்
3.5/5
-மு.ஜெகன் கவிராஜ்