ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சாதி அரசியலையும் ஆணவக்கொலைகளின் உக்கிரத்தையும் பேசி இருக்கிறது எட்டுத்திக்கும் பற. படத்தின் இயக்குநர் கீரா ஏற்கனவே பச்சை என்கிற காத்து படம் மூலம் சிறிதாக கவனம் பெற்றிருந்தார்.
சமூக நலனை விரும்பும் எல்லாரையும் உலுக்கியெடுத்த தர்மபுரி இளவரசன் திவ்யா திருமணத்தால் ஏற்பட்ட சாதிக் கலவரத்தை கருவாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். இளவரசனின் மரணம் ஏற்படுத்திய அதிர்வு பலமானது. ஆனாலும் நமது சமூகத்தில் ஆணவக்கொலைகள் தொடரத்தான் செய்கின்றன. காதலுக்கு இனம் பொருளாதாரம் முக்கியமில்லை என்பதையும் இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல முனைந்திருக்கிறார்.
மிக காத்திரமான கதைக்களம் தான். ஆனால் அதைத் தேர்ந்த திரைமொழியாகக் கொடுக்க இயக்குநர் ரொம்பவே தடுமாறி இருக்கிறார். மனதைப் பதபதைக்க வைக்கும் ஒரு விசயத்தை திரைக்கதையாக எழுதும் போது நம் மனதில் தோன்றும் காட்சிகளை திரையில் அப்படியே கொண்டு வருவதற்கு இயக்குநரின் ஆற்றல் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பட்ஜெட்டும் முக்கியம். பற சுதந்தரமாகப் பறக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சமுத்திரக்கனி சாந்தினி தவிர நிறைய நடிகர்களின் நடிப்பில் கதையில் உள்ள ஜீவன் இல்லை. அம்பேத்கர் கதாப்பாத்திரத்தில் சமுத்திரக்கனி மிக அற்புதமாக கவர்கிறார். குறிப்பாக சாதி ஆதிக்கவாதிகளின் மனநிலை எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் என்பதை அவர் சாந்தினி சஜுமோன் ஜோடிக்கு அறிவுறுத்தும் காட்சி அட்டகாசம்.
படத்தில் ஒளிப்பதிவும் இசையும் படத்தைக் காப்பாற்ற பெரிதும் போராடியிருக்கின்றன. “உசுருக்குள் உன் பேர எழுதி வச்சேன்” பாடலில் உள்ள வரிகள் இசை விஷுவல் மூன்றுமே ஆகத்தரம்..
தலித் அரசியலையும், ஆணவக் கொலைகளையும், அவ்வப்போது சமூகத்திற்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய கடமை இயக்குநர்களுக்கு இருக்கிறது. அதைக் கீரா போன்ற இயக்குநர்கள் சொல்லிக்கொண்டே வருகிறார்கள். இருப்பினும் கீரா இன்னும் வலிமையான திரைமொழியோடு சொல்லிருந்தால் எட்டுத்திக்கும் பற-யை கொண்டாடித் தீர்த்திருக்கலாம்!
-மு.ஜெகன்சேட்