கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘தர்பார்’ படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனம் ஈடு செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கத் துவங்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் உண்மையாகவே நஷ்டமா..? இல்லை இது அரசியல் லாபத்திற்காக பரப்பப்படும் வதந்தியா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஏரியா விநியோகஸ்தரான பாண்டி கண்ணன் கூறும் தகவலையும் புறக்கணிக்க முடியவில்லை.
படத்தின் வசூல் குறித்து அவர் கூறும் போது, “படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் தான் வரவேற்பு இருந்தது. பின்னர் கூட்டம் குறையத் தொடங்கிவிட்டது. இது குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்ட போது, இன்னும் ஒரு வாரம் காத்திருக்கச் சொன்னார்கள். நாங்களும் காத்திருந்தோம், ஆனால் நிலை மாறவில்லை. இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை அணுகினால், ‘படத்தை தயாரித்த வகையில் அவர்களுக்கே 70 கோடி வரை நஷ்டம் என்றும், ரஜினிக்கும் முருகதாஸுக்கும் அதிக சம்பளம் கொடுத்துவிட்டோம். அதனால் நீங்கள் அவர்களை சந்தியுங்கள் என்று கூறிவிட்டார்கள், இதனால் விநியோகஸ்தர்கள் அனைவரும் ரஜினியை சந்திக்க முடிவு செய்துள்ளோம். அவர் எங்களை சந்திக்க மறுத்தால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்..” என்று கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.