Tamil Movie Ads News and Videos Portal

டங்கி- விமர்சனம்

தேவைகளுக்காக வாழ்வை விட்டு கொடுக்கும் எளிய மனிதர்களின் கதை டங்கி

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலத்தில் உடலுழைப்பை செலுத்தும் பணியாளர்களை வரவேற்று பணி கொடுக்கிறது இங்கிலாந்து. லீகலாக கூலித்தொழிலுக்கு வருபவர்கள் அங்கு வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தை வசதியாக மாற்றுகிறார்கள். இல்லீகலாக டங்கி மூலம் செல்லும் நபர்கள் இந்தியாவிற்கு திரும்பி வர வழியற்று அங்கேயே வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். மேலும் இல்லீகலாக போகும் பயணத்தில் நடக்கும் உயிர்ப்பலிகளும் உறுப்பு இழப்புகளும் கணக்கில் அடங்காதவை. டங்கி படம் இப்படியான பின்புலத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது

பஞ்சாபில் உள்ள டாப்ஸி குடும்பத்திற்கு ஒரு நன்றிக்கடன் பட்டுள்ளார் ஷாருக்கான். அதற்காக டாப்ஸிக்கு உதவ நினைக்கிறார். டாப்ஸியின் அஜெண்டா இங்கிலாந்து சென்று நிறைய சம்பாதித்து தன் வீட்டை மீட்கவேண்டும் என்பது. இங்கிலாந்து செல்ல விசா வேண்டும். அவரோடு இன்னும் சிலரும் அவரவர்களுக்கான வெவ்வேறு காரணத்திற்காக இங்கிலாந்து செல்ல நினைக்கிறார்கள். ஷாருக்கான் டாப்ஸிக்காக இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார். கல்வி மற்றும் ஆங்கிலம் பேசுவதில் உள்ள சிக்கல்களால் ஷாருக் & டாப்ஸி டீமிற்கு விசா மறுக்கப்பட, அவர்கள் இல்லீகலாக இங்கிலாந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். அவர்களின் இல்லீகல் பயணத்தின் முடிவு என்ன என்பதே படத்தின் முடிவு

வயது எத்தனை ஏறினாலும். சிங்கம் சிங்கம் தான் என்பதை நிரூபித்திருக்கிறார் ஷாருக்கான். மாஸ் ஆக்சனை ஓரமாக வைத்துவிட்டு கதைக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துள்ளார். கோர்ட்டில் பேசும் எமோஷ்னல் காட்சி ஒன்றிலும் க்ளைமாக்ஸ் காட்சி ஒன்றிலும் நம் கண்களை குளமாக்கிவிடுகிறார். டாப்ஸி கரியரில் மிக முக்கியமான படம் இது. மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஷாருக் டாப்ஸி கெமிஸ்ட்ரி டாப் ஆக வொர்க்கவுட் ஆகியுள்ளது. விக்கி கெளஷல், பொம்மன் இரானி இருவரும் நல்ல நடிப்பால் மிளிர்கிறார்கள்

திரையில் நிகழும் பெரு மகிழ்வையும் பெருந்துன்பத்தையும் அமன் பந்த் தன் இசைவழியே நமக்குள் கடத்துகிறார். கதை நாயகனின் உணரச்சி நிலைக்கு ஏற்ப பாடல்களும் அமைந்துள்ளது. டங்கியின் அசுரபலத்தில் மற்றொன்று ஒளிப்பதிவு. லண்டன் வீதி, பஞ்சாப் வீதி, நடுகடல், சவுதியின் பார்டர் என சி.கே முரளிதரன், மனுஷ் நந்தன், அமித்ராய், குமார் பங்கஜ் ஆகிய நால்வரும் ஒளிப்பதிவால் நம் கண்கள் நிறைக்கிறாரகள்

நம் தேசத்தில் வாழவழியற்று டங்கி மூலம் மாற்று தேசம் சென்று உயர்ந்தவர்கள் மிக சொற்பம். செல்லும் வழியில் உயிர் விட்டவர்களே அதிகம் என்ற டீடெய்ல் திரையில் காட்டப்படும் போது, “செத்துச் சாம்பலாகப் போற வாழ்க்கையில எதெல்லாம் பட.வேண்டியிருக்கிறது” என்ற எழுத்தாளர் இமயத்தின் வரிகள் நினைவுக்கு வந்தது. ஆங்கிலம் பொதுமொழி எனும் போது அதன் தேவையும் அதை உணராத மனித சமூக நிலையையும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மிக அழகாக திரையில் காட்டியுள்ளார். திரைக்கதையை தொய்வின்றி நமக்குள் கடத்த ஆங்காங்கே அவர் தூவியுள்ள காமெடி காட்சிகள் மனதை இலகுவாக்குகிறது. போலவே சில எமோஷ்னல் காட்சிகள் மனதை ரணமாக்குகிறது. குறிப்பாக வயதான பின்பும் டாப்ஸி ஷாருக்கனுக்குள் வெளிப்படும் அந்தக் காதல் உணர்வு கனமான ஹைக்கூ கவிதை. லாஜிக் என்ற அடிப்படையில் பார்க்கும் போது ஷாருக்கானும், டாப்ஸியும் ஏன் 25 வருடங்கள் பேசாமல் இருந்தனர்? டாப்ஸி தன் தேவைகளுக்காக மட்டுமே ஷாருக்கை யூஸ் பண்ணுகிறாரா? டாப்ஸியின் லண்டன் செல்கையின் நோக்கம் அவ்வளவு வீரியமிக்கதா? இப்படியான கேள்விகள் எழலாம். ஆனால் பிரிந்த உறவை புதுப்பிக்கும் வாழ்வும் வாய்ப்பும் இந்த இரு கேரக்டர்களுக்கும் அமையவில்லை என்பதை மைல்டாக காட்டியுள்ளார் இயக்குநர். மேலும் ஒருவர் நலனில் பிறரொருவர் அக்கறை கொண்டுள்ளதையும் காட்சிகள் எடுத்துரைக்கின்றன. டாப்ஸியின் நோக்கம் முதலிலே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அதனால் அவர் சுயநலவாதி என்ற வாதத்திற்கு வழியில்லை. நோக்கம் என்பது அந்தந்த மனிதர்களின் மன தாக்கத்தைப் பொறுத்தே. தன் தந்தை ராஜா போல் வாழ்ந்த வீட்டை அவருக்கு மீட்டுக்கொடுக்க, தான் வாழ்ந்த நாட்டையே துறக்க நினைப்பது எப்படிப் பார்த்தாலும் பெரிய நோக்கமாகத் தான் உள்ளது

கலை படைப்பாகவும் நிச்சயமாக உயரத்தில் வைத்து பார்க்கும்படியாகவே இயக்கியுள்ளார் ராஜ்குமார் ஹிரானி.
தியேட்டருக்குள் நம்பிச் செல்லும் ரசிகனை சல்யூட் அடிக்கும் வைக்கும் இந்த டங்கி
3.75/5
-மு.ஜெகன் கவிராஜ்