சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’.ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகி ஆக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
” இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் மகிழ்ச்சியின் சொட்டுகளை வீணடிக்காமல் ரசிப்பவர்கள்.
நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது.கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் ‘ட்ரீம் கேர்ள்’ படம்.இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.கதையிலும் குளிர்ச்சி இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது “என்கிறார்.
படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது,
“இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.’சில்ட்ரன் ஆப் ஹெவன்’ மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம்.ஆறு – ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான ‘ப்ரேவ் ஹார்ட் ‘கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.இது மிகவும் தவறான போக்கு சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.
சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுக்க முடியும் . ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள் .சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்கு லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது” என்றார்.