Tamil Movie Ads News and Videos Portal

திரெளபதி- விமர்சனம்

இங்கு எல்லாக் கருத்திற்கும் எதிர் கருத்து உண்டு. அதைச் சொல்லும் தொனியில் கலை நேர்த்தியோ கலை அம்சமோ இல்லாமல் அந்தக் கருத்து மட்டுமே துருத்திக் கொண்டு இருக்குமானால் அது வன்மமாக மட்டும் தான் இருக்கும். அப்படியொரு வன்மம் தான் திரெளபதி.

கண்ணாடியும் செயினும் போட்டுக்கிட்டு பிள்ளைங்களை உஷார் பண்ற வேலையை ஒரு சாரார் மட்டும் தான் செய்கிறார்கள் என்பதைத் தூக்கிப்பிடிக்கிறது திரெளபதி. அப்படி கண்ணாடியும் செயினும் இருந்தால் பெண்கள் வலையில் விழுவார்கள் என்பதை எந்த அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

நாடகக்காதல் போலித்திருமணங்கள் பற்றிய விசயத்தைப் பேச வேண்டும் தான். ஏன்னா அப்படியான விசயங்களும் இங்கு நடக்குது தான். ஆனால் அது எல்லாச் சாராரிடமும் உள்ளதல்லவா?

பரியன் தன் அரசியலை உளவியலைப் பேசும்போது அவனுக்குத் துணைபுரிய, அவனைப் புரிந்துகொண்டு ஆனந்த் இருந்தான். ஆனால் இங்கு அப்படியொரு கேரக்டர் எதிர்த்தரப்பில் இருப்பதாக காட்டப் படவே இல்லை. தாஸ் என்ற கேரக்டர் தன் தரப்பில் நட்போடு இருப்பதாகக் காட்டப்பட்டாலும் அந்தக் கேரக்டரும் நாடகக்காதல் சிந்தனையாளன் என்பதாக காட்டப்பட்டுள்ளது.

ஒரு சங்கத்தலைவன் ஒரு சாரார் மட்டும் தான் நீதிமான்கள். எதிர் சாரார் கொடூரமானவர்கள் என்றால் ..சரி அவன் சங்கத்தில் இருக்கிறான். அதனால் அப்படி உளறுகிறான் என்று சொல்லலாம். ஆனால் ஒரு படைப்பாளி இப்படி ஆதிக்க சார்பு நிலையை கையில் எடுத்திருப்பது பேராபத்து அல்லவா?

“நீ நான்னு கை நீட்டி பேசுறதை எல்லாம் சிட்டியில வச்சிக்க..இங்கெல்லாம் மரியாதை அவசியம் ” என்று ஹீரோ ஒரு டயலாக் பேசுகிறார். இந்தப்படத்தை கிராமத்தில் இருந்து பார்க்கும் ஒருவனுக்கு என்ன தோன்றும். நேற்றுவரை தன் தோளில் கை போட்டு பழகும் நண்பனை எப்படிப் பார்ப்பான்?

படத்தின் நோக்கம் பதிவுத் திருமணம் செய்யும் இடங்களில் சிசிடிவி கேமரா வேண்டும் என்பதும், மணப்பெண் இல்லாமலே திருமணம் நடைபெற்றதாய் காட்டி பெண் வீட்டாரை மிரட்டும் கும்பல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் தான். மிகச்சிறந்த கருத்து. நிச்சயம் இதுப் பேசப்பட வேண்டியது. ஆனால் அதைப் பேசுவதற்கு இயக்குநர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் பயமாக இருக்கிறது. நம்மை விட இவன் கீழானவன் என்ற சிந்தனை ஆபத்தானது. அதேநேரம் அது மனதிற்குள் சின்ன கிளர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. அந்தக் கிளர்ச்சியை ஊக்குவித்தால் நிச்சயம் நாடு தாங்காது. இப்போது மதம் சார்ந்து நாடெங்கும் மனிதவேட்டை நடந்து வரும் சூழலில் தமிழகம் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதை கடைப் பிடித்து கெத்து காட்டி வருகிறது. மதமாக பிரியாத நம்மை ஜாதியை வைத்து பிரிக்கும் சூழலுக்கு இப்படியான படங்கள் வழிகோலும் ஆபத்து உள்ளது.

ஆக கருத்தியல் ரீதியாக இந்தப்படத்தில் நமக்கு உடன்பாடே இல்லை. அதேநேரம் 50 லட்ச ரூபாயில் பெரிதாக போர் அடிக்காத ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என்பது ஒரு நல்ல முன்னெடுப்பு. ஒரு படைப்பாளியாக இயக்குநர் சறுக்கி இருந்தாலும் ஒரு பிஸ்னெஸ் மேனாக ஜெயித்திருக்கிறார். ஆனால் இந்த வியாபாரத்தை அனைவரும் கையில் எடுத்தால்….ஒரே நாடு ஒரே காடு தான்!

-மு.ஜெகன்சேட்