Tamil Movie Ads News and Videos Portal

”குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” – ஏ.ஆர்.ரஹ்மான்

கொரோனாவின் கோர முகம் உலகெங்கும் பலவிதமான பிரச்சனைகளைத் தோற்றுவித்து வருகிறது. ஒருபுறம் மருத்துவக்குழுவினர் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்க, அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் மக்கள் வெளியில் நடமாடி சமூக ஊரடங்கை சீர் குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலருக்கு உணவுத் தட்டுப்பாடி மற்றும் பொருளாதாரச் சிக்கலும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை எப்படி சமாளிக்க என்று அரசு திணறி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதே நேரம் இது மத ரீதியிலான மோதலாக வேறு மாறுவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “தன்னலம் பார்க்காது பொதுநலத்துடன் உலகைக் காக்கப் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இவர்களைப் பார்க்கும் போது மனம் அன்பால் நிறைகிறது. அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். கடவுள் நம் உள்ளத்தில் தான் இருக்கிறார். அவர் இருப்பதற்கு மிகச் சிறந்த இடம் அதுதான். அதனால் இது போன்ற அசாதாரணமான சூழலில் மத வழிபாட்டுத் தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கம் உத்தரவிடும் வழிமுறைகளைக் கடைபிடித்து நம்மை நாம் காத்துக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை கடைபிடிக்கும் நேரம் இது. மேலும் நம்மிடம் இருக்கும் மனிதம் ஆன்மிகம் இரண்டு செயல் வடிவம் பெற வேண்டிய தருணமும் இது தான்.” என்று பதிவிட்டுள்ளார்.