Tamil Movie Ads News and Videos Portal

QUBE பிரச்சனைக்கு நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்வு

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பளர்கள் சங்கம், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் இடையில் VPF கட்டணம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டது.கடந்த இரண்டு மாதங்களாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இடையே VPF கட்டணம் குறித்து பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அந்த பேச்சு வார்த்தை இன்று இனிதே முடிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், QUBE நிறுவனத்திற்கும், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அதன் படி, QUBE நிறுவனம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கு தற்போது இருக்கும் கட்டணத்தில் கணிசமான சதவீதத்தை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்துள்ளது. 31/3/2021 தேதிக்குள், இந்த VPF பற்றிய ஒரு நிரந்தர தீர்வை மூன்று சாராரும் இணைந்து செய்து கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட துறை இந்த கொரோனா கால பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும், புதிய திரைப்படங்கள் வெளியாவதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், மூன்று சாராரும் இந்த சுமூகமான முடிவுக்கு வந்துள்ளனர்.

31/3/2021 தேதிக்குள், மூன்று சாராரும் இணைந்து VPF கட்டணம் பற்றிய ஒரு நிரந்தர தீர்வை எடுக்க உறுதி கொண்டுள்ளார்கள். அதன் மூலம், இந்த பிரச்சனை மீண்டும் தொடரக் கூடாது என்பதே அனைவரின் நோக்கம்.இந்த ஒப்பந்தத்தில் மூலம், 31/3/2021 வரை தமிழ் சினிமாவில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை. அதிக எதிர்பார்ப்பில் உள்ள பல பெரிய பட்ஜெட் படங்களும், நடுத்தர மற்றும் சிறு பட்ஜெட் படங்களும் தடையில்லாமல் இனிமேல் வெளியாகும். அதன் மூலம், பார்வையாளர்களுக்கு புதிய படங்களை திரையரங்குகளில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். தமிழ் திரைப்படத்துறை அதன் மூலம் மொத்தமாக மீண்டு வர முடியும் என்று நாங்கள் மூன்று சாராரும் நம்புகிறோம்.

தமிழ் சினிமா மீண்டு வர எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரைப்பட துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறோம்.