டிஸ்னியின் ‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்
மிகப் பெரும் பொருட்செலவில் தயாரான டிஸ்னினியின் ‘ஃபோரஸன் 2’ திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர்தான் ஸ்ருதி ஹாசன். ஆம்… பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்… என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், “ஃபோரஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்ஸா தன் இளைய சகோதரி அன்னாமீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரிமீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்” என்றார்.
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் ‘ஃபோரஸன் 2’. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மற்றும் எல்ஸா -அன்னா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பது திண்ணம்.
இது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு ‘.ஃபோரஸன் 2’ படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்
ஃபோரஸன் 2
ஆங்கிலக் குரல் கலைஞர்கள்: கிறிஸ்டன் பெல், ஜோனாதன் க்ரோப். மற்றும் ஜோஸ் காட்
இயக்கம்: கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ
தயாரிப்பு: பீட்டர் டெல் வெச்சோ
இந்திய வெளியீடு 22 நவம்பர் 2019!
ஃபோரஸன் 2 படம் குறித்து….
எல்ஸா ஏன் மந்திர சக்தியுடன் பிறந்தாள்? இதற்கான விடை தேடும் முயற்சி, அவளது ராஜ்ஜியத்தை பயமுறுத்துகிறது. அன்னா, கிறிஸ்டாப், ஒல்ப் மற்றும் சுவெனுடன் பிரசித்தமான இந்த ஆபத்து மிக்க பயணத்தைத் துவக்குகிறாள் எல்ஸா. ‘ஃபோரஸன்’ படத்தில் தனது பலம் அனைத்தும் உலகுக்கு அதிகம் என்று பயப்படும் அன்னா, ‘ஃபோரஸன் 2’ படத்தில் போதும் என்று நினைக்கிறாள்.
ஆஸ்கர் விருது வென்ற ஜெனிஃபர் லீ கிறிஸ் பக் இயக்கத்தில், பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஃபோரஸன் 2’. கிறிஸ்டன் ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் எழுதிய பாடல்களுக்கு இன்டினா மெல்ஸல், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் கிராஃப் மற்றும் ஜோஸ் காட் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.
டெயில் பீஸ்
2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃபோரஸன்’ திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத் தக்கது.
2013ஆம் ஆண்டு மிகச் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் ‘ஃபோரஸன்’ பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற லெட் இட் கோ பாடல் மற்றும் இசைக்காக ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருது வென்றார்கள்.