”முருகதாஸுக்கு இயக்குநர்கள் சங்கம் துணை நிற்கும்” – ஆர்.கே.செல்வமணி
‘தர்பார்’ பட விவகாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. தர்பார் படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு படம் மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்திருப்பதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து நஷ்ட ஈடு கேட்டு இயக்குநர் முருகதாஸ் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும், அவர்கள் நஷ்ட ஈடு கொடுக்க மறுத்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர்.
இதனையடுத்து இயக்குநர் முருகதாஸ் வீட்டை முற்றுகையிட்ட விநியோகஸ்தர்களை காவல்துறை அப்புறப்படுத்தியது. மேலும் முருகதாஸ் வீட்டிற்கு போலீஷ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய இயக்குநர் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “பெரும் பணத்தை முதலீடு செய்து தொழில் செய்யும் விநியோகஸ்தர்கள் லாபம் வரும் போது பங்கு கொடுத்தார்களா..? பின்னர் எப்படி நஷ்டம் வந்தால் மட்டும் பங்கு கேட்டு வருகிறார்கள். இவர்களின் இந்தப் போக்கை வளர்த்துவிட்டவர் நடிகர் ரஜினிகாந்த் தான். அது அவர் செய்த தவறு, விநியோகஸ்தர்களின் இது போன்ற போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். இயக்குநர் முருகதாஸுக்கு இயக்குநர் சங்கம் துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.