Tamil Movie Ads News and Videos Portal

தயாரிப்பு நிறுவனம் துவங்கினார் இயக்குநர் வசந்தபாலன்!

தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன் இயக்குநர் ஷங்கருடன் துணை, இணை இயக்குநராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள தேசிய விருது பெற்ற இயக்குநரான வசந்தபாலன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்கியதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவராவார்.

தற்போது அவர், தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய ஜி வி பிரகாஷ் நடித்து, இசையமைக்கும் ஜெயில் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. இவற்றில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இணைந்து பாடிய ‘காத்தோடு காத்தானேன்…’ பாடல் 14 மில்லியன் பார்வைகளை கடந்து தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் படித்த நூறு ஆண்டுகளைக் கடந்த பெருமைமிகு பள்ளியான க்ஷத்திரிய வித்யாசாலாவில் தன்னுடன் பயின்ற மூன்று நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர் வசந்தபாலன் தொடங்கியுள்ளார்.அதில் ஒருவரான வரதராஜன் வசந்தபாலனுடன் ஆல்பம் திரைப்படம் துவங்கி அவரது எல்லா திரைப்படங்களிலும் உதவி இயக்குநர், கேஸ்டிங் இயக்குநர், புராஜெக்ட் டிசைனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் என பல்வேறு பணிகளில் ஈடுபட்ட அனுபவம் பெற்றவர். வெயில் திரைப்படத்தில் இடம்பெற்ற பரத் கதாபாத்திரம், லோக்கல் விளம்பர நிறுவனம் எல்லாம் அவரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை.

இன்னொரு நண்பரான முருகன் ஞானவேல் தற்போது அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனத்தில் உயரதிகாரியாக உள்ளார். மற்றொரு நண்பரான கிருஷ்ணகுமார் கணினி உப பொருட்களை சிறியதாக விற்கத்துவங்கி தன் கடின உழைப்பால் இன்று தொழிலதிபராக உயர்ந்த இடத்தில் உள்ளார்.விரைவில் இவர்கள் தயாரிக்கவுள்ள திரைப்படத்தின் பெயரும், அதில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகளின் பெயர்களும் அறிவிக்கப்படும். தனது முந்தைய படங்களைப் போலவே, புதிய படமும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அழுத்தமாகவும், அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.