தேசிய விருது பெற்ற பாரம் திரைப்படத்தை இயக்கியவர் ப்ரியா கிருஷ்ணசுவாமி. குடும்பத்தில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் வயோதிகர்களை ‘தலைக்கூத்தல்’ என்கின்ற முறைப்படி கருணைக் கொலை செய்யும் நடைமுறை இன்னும் சில கிராமங்களில் வழக்கத்தில் இருந்து வருகிறது. அது போன்ற ஒரு தலைக்கூத்தல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “பாரம்” திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை வெற்றிமாறன் தனது பேனரின் மூலம் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின் பாரம் படத்திற்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டுவேன், என்று கூறியிருந்தார். கூறியதோடு இல்லாமல் தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டவும் செய்தார். இது குறித்துப் பேசியிருக்கும் பாரம் படத்தின் இயக்குநர் ப்ரியா, “மிஷ்கின் இந்திய அளவிளான இயக்குநர்களில் முக்கியமானவர். அவர் என் போன்ற புதியவர்கள் மீது காட்டும் அன்பும் அரவணைப்பும் ஆச்சரியப்படுத்துகிறது. அவரது அன்புக்கு அளவே இல்லை..” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.