Tamil Movie Ads News and Videos Portal

பாரதிராஜா எதனால் அப்படி பேசினார்?- தயாரிப்பாளர் விளக்கம்

- Advertisement -

நேற்றைய தினம் இயக்குநர் இமயம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பெருமைக்குரிய திரு. பாரதிராஜா அவர்களை விமர்சித்து சில பதிவுகள் வந்தன. குறிப்பாக ‘நோஞ்சான்’ என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவறாக மற்ற சங்கத்தினர் பற்றிக் குறிப்பிட்டு விட்டார் என்ற குரல்கள்! அவரைத் தெரிந்தவர்களுக்கும், அவரை நெருக்கத்தில் பழகியவர்களுக்கும், அவருடன் பணி புரிந்தவர்களுக்கும் தெரியும் அவர் ஒரு நேர்மையான அக்னி மனதுக்காரர் என்று!

எங்கெல்லாம் சினிமாவுக்கு எதிரான நிகழ்வுகள் நடக்கின்றதோ, எங்கெல்லாம் அப்பாவி சினிமா ஆட்கள் பாதிக்கப்படுகிறார்களோ, எங்கெல்லாம் அறியாமையில் சினிமா வியாபாரம் களவு போகின்றதோ, எங்கெல்லாம் சினிமா தயாரிப்பாளர்கள் நசுக்கப்படுகிறார்களோ…அங்கெல்லாம் அவரின் குரல் உயர்ந்திருக்கிறது. தன் துறையின் மற்ற நண்பர்களுக்காக அவருடைய ஆதரவுக் கரம் எப்போதுமே நீண்டு அரவணைத்திருக்கிறது. இப்போதும் அதுதான் நிகழ்ந்தது. நோஞ்சான் என்பது வலிவற்றவர்களின் குரலற்ற நிலையினை சுட்டிக் காட்டுவது.

அவர் எப்போதுமே யாரையும் நையாண்டி செய்ததில்லை.உணர்ச்சி கொண்ட, உதவி செய்யும் கலைஞன்! சிறுமை கண்டு பொங்கும் சீற்றம் கொண்டவர். சிறுபடத் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வியாபாரம் செய்ய வழி தெரியாமல்,வியாபார விபரங்கள் பிடிபடாமல், எப்படி தியேட்டருக்குப் படத்தைக் கொண்டு செல்வது என்ற விசயம் புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையினைக் கண்டு எத்தனை இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறார்..? எல்லாப் பேட்டிகளிலும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.அவர் மனது, அன்பை வெளிப்படுத்தும் மனது,அதிகாரத்தை எதிர்க்கும் மனது, சக தோழர்களுக்கு நன்மை செய்யத் துடிக்கும் மனது, வறுமை கண்டு இறங்கும் மனது..!

வெளிவர முடியாமல் தவிக்கும் 80 சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் ஏன் திரையிட ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்வியைக் கேட்ட அதே பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது தொக்கி நின்ற வார்த்தையே நோஞ்சான் என்பது. ஃபெஸ்டிவல் நேரங்களில் சிறிய படங்களை மட்டுமே திரையிட வேண்டும், மற்ற நேரங்களில் பெரிய நடிகர்களின் படங்களைத் திரையிட்டால் சிறிய படங்கள் பிழைத்துக் கொள்ளும், பெரிய படங்களும் குறைவில்லாமல் ஓடும், திரையரங்கங்களும் நல்ல லாபம் ஈட்டும் என்பதை முதன்முதலில் சொன்னதே இவர்தான்.

தயாரிப்பாளர்கள் நோஞ்சான்களா..?ஆம்..! இந்தத் தமிழ்த் திரைப்பட உலகில் 80 சதவீதத் தயாரிப்பாளர்கள் நோஞ்சான் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்காகக் குரல் கொடுக்க வந்திருக்கும் ஒரு மூத்த கலைஞன், கூட்டுக்குள் சுருங்கியிருந்த சினிமாவுக்கு எல்லைகளற்ற வான்வெளியைத் திறந்து காண்பித்தவர். அவர் அடைந்த புகழுக்கும், பெருமைக்கும் சும்மா அமர்ந்திருந்து வேடிக்கை மட்டும் பார்த்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்ட கலைஞன், மனதில் ஈரமுள்ள படைப்பாளி அப்படிச் சும்மா உட்காருவதில்லை.
குரலற்றவர்களின் குரலாய் ஒலிக்க வீறுகொண்டு வந்திருக்கும் அவரை நாம் சரியான வகையில் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் நடிகர் சூர்யா ஐந்து கோடி ரூபாயை வழங்கப் போவதாக அறிவித்தபோது, உடனடியாக திரு. சூர்யாவைத் தொடர்பு கொண்டு 300 தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திலிருக்கும் நிலையினை எடுத்துக் கூறி, அவர்களுக்கு ஆளுக்கு ரூ. 10,000/- வீதம் கொடுக்க வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைத்தவர். அதற்கு திரு. சூர்யாவும் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த 30 லட்ச ரூபாய் பணம் தயாரிப்பாளர்களுக்கு வேறு வகையில் செலவு செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் கோரிக்கை வைத்தபோது, குழப்பத்தில் யோசித்த திரு. சூர்யாவிடம் ‘எதுவானாலும் தயாரிப்பாளர்களின் நன்மைக்கே’ என்று சொல்லி அன்புக் கட்டளையிட்டவர்.
முன்னூறு தயாரிப்பாளர்களுக்குச் சேர்ந்திருக்க வேண்டிய முப்பது லட்சம் ரூபாய் இப்போது தயாரிப்பாளர்கள் சங்க நிதியில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் சாங்கியத்திற்காக ஒற்றை வார்த்தையைத் தனித்துத் திரித்து, தயாரிப்பாளர்களைப் பலமிழக்கச் செய்வது நல்லதல்ல. எந்தச் சங்கமும் அவருக்குத் தேவையில்லை. ஆனால், சங்கத்திற்குத்தான் அவர் தேவை. இதைப் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் ஒருசிலரும் விரைவில் புரிந்து கொள்ள வேண்டும். தயாரிப்புத் துறை பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்,
தயாரிப்பாளர்களின் லாபத்தையெல்லாம் ‘சேவை’ என்ற பெயரில் யார் யாரோ கூறு போட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில்,
தயாரிப்பாளர்கள் தங்கள் உரிமைகளைப் படம் தயாரிக்கும்போதும், வெளியிடும்போதும் பேசவே முடியாமல் மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் நிலையில்,
நிஜமாகவே பெரும்பாலான படங்கள் நிச்சயம் லாபம் கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்த முனைந்திருக்கும் இப்போது நம் அனைவருக்கும் தேவை ஒற்றை வார்த்தை..!
அது…ஒற்றுமை! ஆம்…ஒற்றுமை.

முன்னேர் போல அவரது ஒரு குரல் ஓங்கி ஒலிக்க, அதன் பின்னால் ஆயிரம் குரல்கள் எழுப்பப்பட்டால் திரைக் காடே அதிரும்! அந்தக் கர்ஜனைதான் நம் வியாபாரத்தை நேர்படுத்தும்,நம் லாபத்தை மீட்டெடுக்கும்!எல்லோரும் பாரதிராஜா என்ற கலைஞனுடன் ஒன்றிணைந்து நமக்கான வியாபாரத்தை உறுதிப்படுத்துவோம்!

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.