சேது, நந்தா, பிதாமகன் என்று தமிழ் சினிமாவின் இயக்கத்தில் புதிய உச்சங்களைத் தொட்ட இயக்குநர் பாலா. இவரது இயக்கத்தில் நடித்தப் பின்னர் தான் நடிகர்கள் சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா, ஜி.வி.பிரகாஷ் போன்றோர் நடிப்பில் புதிய உச்சத்தைத் தொட்டார்கள். ஆனால் அப்பேர்ப்பட்ட இயக்குநர் பாலாவிற்கு கரும்புள்ளியாக அமைந்த நிகழ்வு, அவர் இயக்கிய ’வர்மா’ படம் சிறப்பாக உருவாகவில்லை என்று சொல்லி படக்குழு வெளியிடாமல் நிறுத்தி வைத்த நிகழ்வுதான். ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக விக்ரம் மகன் த்ருவ் விக்ரம் நடிப்பில் இப்படத்தை பாலா உருவாக்கியிருந்தார்.
தயாரிப்பு தரப்பு மீண்டும் அதே படத்தை கீரிஸய்யா மூலம் ‘ஆதித்த வர்மா’ என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டது அப்படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சில மாதங்களாகவே பாலா இயக்கிய வர்மா திரைப்படம் இணையத்தில் அல்லது வெளிநாடுகளில் வெளியாகலாம் என்ற செய்தி வெளியாகி வந்தது. தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இப்படம் வெளியாகி வெற்றிபெற்றால், அதை நிறுத்தி வைத்தது தன்னுடைய தவறு என்று ஒப்புக்கொள்வதாகவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்பொழுது இப்படம் வெளியாகி பாலா தன் திறமையை மீண்டும் ஒரு முறை நிருபிப்பாரா..? என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.