டைரி என்றதும் எல்லோர் மனதிலும் கடந்த காலமும் கடந்த காதலும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த டைரி வேறோர் ஜானரைப் பேசுகிறது
ஊட்டியில் இருந்து ஒரு பேருந்து நள்ளிரவில் கோயம்புத்தூர் கிளம்புகிறது. அந்தப் பேருந்துக்குள் மூன்று திருடர்கள் இருக்கிறார்கள். ஒரு காதல் ஜோடி இருக்கிறது. ஒரு இளம்பெண் இருக்கிறார். குழந்தைகளோடு ஒரு குடும்பம் இருக்கிறது. இரு இளைஞர்கள் இருக்கிறார்கள். ஒரு மந்திரக்கார கிழவி இருக்கிறாள். இவர்களோடு சேர்த்து சிலபல பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்தப் பிரச்சனையை சரி செய்ய அருள்நிதி அந்தப்பேருந்தில் ஏறுகிறார். அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதே டைரியின் கதை
தன் நடிப்புக்கேற்ற கதையை செலக்ட் செய்வதில் அருள்நிதி எப்போதுமே சமர்த்து. இந்தக் கதைக்குள்ளும் தன்னை மிகையின்றி பொருத்தியிருக்கிறார். அறிமுக நாயகி பவித்ரா ரெளத்திரமாக பில்டப் கொடுத்து அறிமுகம் ஆகிறார். ஓரளவு ஓ.கே ரகம் அவரது நடிப்பு. சாம்ஸ் அடிக்கும் குட்டி குட்டி கமெண்ட்கள் ரசிக்க வைக்கின்றன
படத்திற்கு பக்கபலமாக இருப்பது அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு. ஊட்டி மலையோர பேருந்து பயணத்தை அழகாக காட்டியுள்ளார். பல இடங்களில் திகிலையும் கூட்டியுள்ளார். இசை அமைப்பாளர் போகிறபோக்கில் வாசித்து தள்ளமால் ஓரளவு படத்தின் நகர்வுக்கு டெம்போ ஏத்தியிருக்கிறார். ஒரு பாடலில் கூட இதம். சிஜி டிப்பார்ட்மெண்ட் தான் படத்தில் ஜொலிக்கவே இல்லை. அங்கங்கே சிஜி ஏரியா பல்லைக் காட்டுகிறது.. Then படத்தில் பகலை இரவாக மாற்றும் தொழில்நுட்பம் அநியாயத்திற்கு தோற்றுள்ளது. பல இடங்களில் இது அப்பட்டமாக தெரிகிறது
வெகு அழகாக யோசிக்கப்பட்டு எழுதப்பட்ட கதையிது. கதையை தேர்வு செய்ததில் இயக்குநர் இன்னாசி
பாண்டியன் ஜெயித்துள்ளார். நல்ல கதை மட்டுமே திரை ரசிகனுக்கு போதாதே. நல்ல திரைக்கதை அல்லவா முக்கியம். அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் இயக்குநர் உழைத்திருக்க வேண்டும். இந்தக் கதைக்குள் ஒரு மாந்தராக நாம் பயணிக்க முடியாதது ம் ஒருகுறை. ஆயினும் அந்த பேருந்து சம்பந்தப்பட்ட ஒரு ட்விஸ்ட், அருள்நிதி அம்மா அப்பா சம்பந்தப்பட்ட ஒரு ட்விஸ்ட். ஒரு அம்மா செண்டிமெண்ட் ட்விஸ்ட் என மூன்று ட்விஸ்ட்கள் படத்தில் முத்தாக இருக்கின்றன. நிச்சயமாக சிலபல சமரசங்கள் செய்துகொண்டு ஒருமுறை கண்டு ரசிக்கலாம் இந்த டைரியை.
3/5
-மு.ஜெகன் கவிராஜ்
#Diary #டைரி