Tamil Movie Ads News and Videos Portal

டெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம் மேக்கர் விருது’ பெறுகிறார்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின்
செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.

2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா, இன்று இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. இந்த மாபெரும் விழாவில், அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்திருக்கும் தமிழக துணை முதல்வர் மேதகு ஓ பன்னீர் செல்வம் அவர்களும் கலந்துக் கொண்டுச் சிறப்பிக்கிறார்கள்.

இந்த விழாவில் இப்பணிக் குழுவினருடன் அமெரிக்கவாழ் இந்திய சமூகமும் இணைந்து, தமிழக துணை முதல்வருக்கு ‘உதய நட்சத்திரம்’ எனும் விருது வழங்கி கௌரவிக்கிறார்கள். இதே விழா மேடையில், ‘இந்த ஆண்டின் சிறந்த பிலிம்மேக்கர்’ விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.

2010 ஆம் ஆண்டு டேனி கே டேவிஸ் எனும் அமெரிக்க காங்கிரஸ்காரரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த குழுவானது, அமெரிக்காவில் வாழுகின்ற பல்வேறு இன-மொழி-நாட்டு மக்களிடையேப் புரிதல்களை உருவாக்கி, ஒன்றிணைந்து இணக்கமாக வாழ்ந்திட ஊக்குவித்து வருகிறது.

இந்நிறுவனத்தின் சார்பாக ஆண்டுதோறும் ஒவ்வொரு துறையிலும் சாதனையாளர்களை அடையாளங்கண்டு, அவர்களை அங்கீகரித்து, பாராட்டும் விதமாக ‘க்ளோபல் கம்யூனிட்டி ஆஸ்கர்ஸ்’ எனும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

இவ்விழா சிகாகோ நகரில் வாழ்ந்து வரும் சுமார் 24 நாடுகளைச் சேர்ந்தவர்களை, ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், மெக்ஸிகோகாரர்கள், இலத்தீன அமெரிக்கர்கள், அயர்லாந்தினர், ஜெர்மனியர்கள், பிரஞ்சுகாரர்கள், கிரேக்கர்கள், உக்ரேனியர்கள், ரஷ்யா நாட்டினர், பிலிப்பைன்ஸ்காரர்கள், ஸ்காண்டிநேவியர்கள், நைஜீரியர்கள், இந்தியர்கள், வியட்நாம்காரர்கள், சீனர்கள், கானா நாட்டினர், ஸ்ரீலங்கா தேசத்தினர், பாகிஸ்தானியர்கள், மத்திய கிழக்கு நாட்டினர், கொரியர்கள், ஜப்பானியர்கள், வங்காளதேசத்தவர்கள் உள்ளிட்ட இன்னபிற தேசங்களை சேர்ந்தவர்களையும் ஈர்த்து வருகிறது.

சுமார் ஆயிரம் பேர் வரையில் கலந்துக் கொள்ளவிருக்கும் இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நேரடி ஒளிப்பரப்பும் செய்யப்படவிருக்கிறது.