ரஜினியிசம் என்றான பின் அதில் லாஜிக் பார்ப்பது எல்லாம் எந்த ஊர் நியாயம்? மும்பை கமிஷ்னராக ஜார்ஜ் எடுக்கும் ரஜினி குக்கைன் கும்பலுக்கு எதிராக கன் எடுத்து ஆடும் அசுர ஆட்டமே தர்பார். இடையில் மகள் செண்டிமெண்ட், நயன்தாரா உடன் செல்ல சிணுங்கல் கலந்த காமெடி, யோகிபாபுவோடு அல்டிமேட் காமெடி, க்ளைமாக்ஸ் வரை அனல் பறக்கும் ஆக்ஷன் என தர்பாரை பக்கா கமர்சியல் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ்.
படம் துவங்கி முடியும் வரை ரஜினியிடம் வெளிப்பட்ட அந்த எனர்ஜி லெவல் நமக்குள்ளும் பற்றிக்கொள்கிறது. 70 வயதிலும் தீயாகத் தான் தெரிகிறார் மனிதர். நயன்தாரா வெறும் அட்மாஸ்பியர் போல தான் படத்தில் வந்து செல்கிறார். நிவேதா தாமஸ் சிறப்பாக நடித்து அழகாக கவனம் ஈர்த்துள்ளார். வில்லன் நடிகர்களை விட படத்தில் அதிகமாக நம்மை ஈர்த்தது யோகிபாபு தான். ரஜினியை அவர் கலாய்ப்பது பெரிய விசயமல்ல..அதற்கு ரஜினி இடம் கொடுத்து அழகு பார்த்தது தான் ஆரோக்கிய சினிமா.
படத்தின் கதை மிகச்சாதாரணமான லைன் என்றாலும் நம் இந்தியாவின் மிக முக்கிய நகரமான மும்பையில் பெண்களும் இளைஞர்களும் கஞ்சா குக்கைன் போன்ற போதை வஸ்த்துக்களுக்கு எப்படி அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் முருகதாஸ். முருகதாஸின் ட்ரேட்மார்க் காட்சிகள் இப்படத்திலும் இருக்கிறது. அவை சிறப்பாகவும் இருக்கிறது. அனிருத்தின் ஓவர் டைம் உழைப்பு பின்னணி இசையில் அசத்தலாக தெரிகிறது
இடைவேளை வரை மின்னலை கையில் வைத்திருந்த படம் அதற்கு அப்புறம் ஸ்லோவாகத் தான் செல்கிறது. ஆனாலும் முடிவில் தெறிக்கும் அனல் எல்லாவற்றையும் மறக்க வைத்து விடுகிறது. குறிப்பாக ரஜினி என்ற பெருமைமிகு கலைஞனை இப்படியொரு எனர்ஜியாக பார்ப்பதற்காகவே தர்பாரை மாறி மாறி பார்க்கலாம்!
-மு.ஜெகன்சேட்