சரியும் உறவுகளை சரிசெய்ய முடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறது டாடா
டாடியை டபுள் டா போட்டு அழைத்தால் டாடா வரும். இப்படியொரு தலைப்பிற்குப் பின்னால் வெறும் எள்ளல் தான் இருக்கும் என்று பார்த்தால், முதல் படத்திலே செம்ம துள்ளல் போட்டிருக்கிறார் இயக்குநர் கணேஷ்பாபு
கவினும் அபர்ணாவும் படிக்கும் போதே காதல் வளர்க்கிறார்கள். காதல் வளர்ச்சியின் விகிதம் அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் போதே அபர்ணா கர்ப்பமாகி விடுகிறார். பின் இருவரும் ஒரு கட்டத்தில் பிரியும் சூழல் வர..முடிவில் பிரிவு சரி செய்யப்பட்டதா என்பதே படத்தின் கதை
கவின் தன் நடிப்பில் தனி முத்திரைப் பதித்து அசத்தியிருக்கிறார். சின்னச் சின்ன ரியாக்ஷன்களில் கூட அவ்வளவு மெனக்கெடல்களை செய்திருக்கிறார். அவரது உழைப்பின் பலன் தியேட்டரில் ரசிகர்களின் பாராட்டு மழையில் நெஞ்சைத் தொட்டுத் நிறைக்கிறது. கவினுக்கு சற்றும் சளைக்காமல் உழைத்திருக்கிறார் நாயகி அபர்ணா. மிகையற்ற அவரின் நடிப்பிற்கு எவ்வளவு பாராட்டுக்களை கொடுத்தாலும் தகும். மேலும் படத்தில் பங்குபெற்ற நடிகர்கள் அனைவருமே கவனம் குவிக்கிறார்கள். உதாரணமாக இளம் நடிகர் சாகுல் ஹமீத் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறார்
பின்னணி இசையில் உணர்வுகளை கடத்துவதில் பின்னியிருக்கிறார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவில் நல்ல மெனக்கெடல் தெரிகிறது
இப்படத்தின் பெரிய பலமாக இருப்பது படத்தின் திரைக்கதை தான். தெரிந்த முடிவாக இருந்தாலும் அந்தப் ப்ளோவை சரிந்து விடாமல் பார்த்திருக்கிறார். வசனங்களிலும் அத்தனை கூர்மை. சர்வ நிச்சயமாக இந்த ஆண்டில் தரமான படம் என்ற லிஸ்டில் டாடா படத்தை கொண்டு வரலாம். சின்னச் சின்ன கேரக்டர்களின் வடிவத்திலும் இத்தனை சிரத்தை எடுத்து எழுதியிருக்கும் இயக்குநருக்கு நல் வாழ்த்துகள்
டாடா- ஆகத்தரம்
4/5
-மு.ஜெகன் கவிராஜ்