Tamil Movie Ads News and Videos Portal

அப்பா,மகளுக்கு கிடைத்தபாக்கியம்!

- Advertisement -

இருவருக்கும் பெயர் சூட்டியது ஜெயலலிதா 1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து,உச்சிமுகர்ந்து ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார்.இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் அந்தக் குழந்தையின் அப்பா அமைச்சர் ஜெயக்குமார் என்பது. நாட்கள் செல்ல செல்ல குழந்தை மாணவனாகி,பள்ளிப்படிப்பை முடித்து,மருத்துவக்கல்லூரியில் படிக்கிறார். 22வது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன்.

படித்து முடித்த போது வயது 24 அவருக்கு… 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். 2013 டிசம்பர் மாதம் திடீரென போயஸ் தோட்டத்திலிருந்து ஜெயவர்தனை, தனது இல்லத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு வருகிறது. மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திய அவர் போயஸ் தோட்டம் இல்லத்திற்கு சென்றார்.அங்கு அமர்ந்திருந்த ஜெயலலிதா, வரும் தேர்தலில் எம்பியாக போட்டியிட உங்களுக்கு விருப்பமா என்று கேட்டுள்ளார். இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோன அவர் சரியென்று சொல்லியிருக்கிறார்.

தென் சென்னை தொகுதியில் நீங்கள் தான் வேட்பாளர், இதை இப்போது யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா.2014 தேர்தலில் தென் சென்னையில் அபார வெற்றி பெற்று 25 வயதில் இந்தியாவின் இளம் எம்.பி என்ற அங்கீகாரத்தை பெற்றார் ஜெயவர்தன். பல்வேறு பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது இவரது குரல். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுத் தந்ததில் இவர் பங்கு மிக முக்கியமானது.வாரிசு அரசியலை முற்றிலும் விரும்பாத ஜெயா எப்படி அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு வாய்ப்பு கொடுத்தது அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யம்.

வட சென்னையில் பிறந்து வளர்ந்தாலும்கூட,தென்சென்னையிலும்,அதைத்தாண்டியும்,எளிமை,இனிமை,பக்குவம்,அடக்கம், அமைதி,புன்சிரிப்பு,உதவும் உள்ளம்,அதிகாரத் தோரணை இல்லாமை என பலவிதங்களில் மக்களோடு மக்களாக பயணித்து அனைவரது மனதிலும்,குறிப்பாக எதிர்க்கட்சியினர் மத்தியிலும் நல்ல பெயரை பெற்றார்.அதன் பலனாக 2019 தேர்தலிலும் அவருக்கு தென்சென்னையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது.

நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்தபோது,அவருக்கு பெண்குழந்தை பிறந்தது.மனைவி ஸ்வர்ணலட்சுமியை அழைத்துக்கொண்டு குழந்தையோடு ஜெயலலிதாவை சந்திக்க சென்றார் ஜெயவர்தன்.தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டுமென்று அவர் சொன்னபோது, ஜெயாவுக்கு அளவில்லா மகிழ்ச்சியாம்.”உனக்கு பேர் வைத்ததும் நான் தான்,உன் குழந்தைக்கும் பேர் வைப்பது மிகுந்த மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்.குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, “ஜெயஸ்ரீ”என்று பெயர் சூட்டி,”அப்பாவைக் காட்டிலும் மிகப்பெரிய ஆளாக நீ வருவாய் என வாயார வாழ்த்தி இருக்கிறார் ஜெயலலிதா.

இத்தனை சம்பவங்களையும் சொல்லி முடித்த ஜெயவர்தன்,”தனக்கும்,தன் குழந்தைக்கும் பேர் சூட்டி,ஊர் பாராட்டும் வகையில், எங்களை சீராட்டி வளர்த்த அன்னை,எங்கள் குலதெய்வம்,வாழ்நாளெல்லாம் நன்றியுணர்வோடு போற்றி வணங்கும் இதயதெய்வம் யாரென்றால் எங்கள் அம்மா தான் என்கிறார்… யாருக்கும் கிடைக்காத பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது…என் மகள் முகத்தில் அம்மாவை பார்த்துக் கொள்கிறேன்” என கண்களில் நீர் வழிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு,குழந்தையைப்போல் மெதுவாக நடக்க ஆரம்பித்தார் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன்……..

- Advertisement -

Get real time updates directly on you device, subscribe now.