கொரோனா தாக்கத்தால் உலகெங்கும் மக்கள் தங்கள் வீடுகளுக்கும் முடங்கும் சூழல் உருவாகியிருக்கிறது. மேலும் இது ஒட்டு மொத்த உலக பொருளாதாரத்தையும் முடக்கி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிலும் சினிமாவில் தியேட்டர்கள், படப்பிடிப்புகள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், பல்லாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த அசாதாரண சூழல் தொடங்கும் போது OTT என்று சொல்லப்படும் ஆன்லைன் மீடியாக்களான அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவற்றின் வியாபாரம் கூடும் என்று கணிக்கப்பட்டது.
தற்போது அந்தக் கணிப்பு மெய்யாகலாம் என்பதற்கு உதாரணமாக காய் நகர்த்தல்கள் தொடங்கியுள்ளன. மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்ட கடையடைப்பு மற்றும் திரையரங்கு மூடல் இருந்தாலும், இது இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரும் என்ற கேள்விக்கு எவரிடமும் விடையில்லை. இதனால் மக்கள் பொழுதுபோக்கிற்காக பெரும்பாலும் OTT-யைத்தான் அணுகுவார்கள் என்ற கணக்கீட்டின் படி, புதிய திரைப்படங்களை பெரும் தொகை கொடுத்து ஓடிடி சேனல்கள் வாங்கி வருகின்றன. அதன் ஆரம்பமாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தனுஷ் ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தினை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருக்கின்றனர். மே 1ல் இப்படம் வெளியிட முடிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.