எந்த சர்ச்சை எப்போது வெடிக்கும் என்றே தெரியவில்லை. 1986ம் ஆண்டு கொடுத்த முத்தத்திற்கு 34 ஆண்டுகள் கடந்து மூப்படையும் பருவத்தில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று கமலோ காலம் சென்ற இயக்குநர் பாலச்சந்தரோ கனவில் கூட நினைத்திருக்கிறார்கள். பாலசந்தர் இயக்கத்தில், கமல், ரேகா, ரேவதி நடிப்பில் 1986ல் வெளியான புன்னகை மன்னன் படத்தின் படப்பிடிப்பின் போது, அருவியில் விழப் போகும் காட்சிக்கு முன்னர், கமலிடம் இயக்குநர், நான் உன் காதில் சொன்னதை செய்’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார்.
உடனே கமல் லபக்கென்று ரேகாவை வளைத்து, அந்த சரித்திரப் புகழ் பெற்ற முத்தத்தை இட்டு இருக்கிறார். படமாகி முடிக்கும் வரை இப்படி ஒரு காட்சியை எடுக்கப் போகிறார்கள் என்று நாயகி ரேகாவுக்கு தெரியாதாம். இந்தத் தகவலை அவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த பேட்டியிலேயே சொல்லிருந்தாலும், அப்போது அதை கண்டு கொள்ளாமல் கடந்தவர்கள் எல்லாம், சமீபத்திய பேட்டியில் அதை நினைவு கூர.. உடனே கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷம் போடத் துவங்கிவிட்டனர். எப்போதோ நடந்த சம்பவத்திற்கு யாரும் மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்க தேவையில்லை என்று ரேகா இந்த முத்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.