நயன்தாராவை கதையின் நாயகியாக்கி அஷ்வின் சரவணன் எழுதி இயக்கிய மாயா திரைப்படம் பெரும் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து கேம் ஓவர் படத்தை டாப்ஸியை நாயகியாக்கி வித்தியாசமாக கதை சொல்லிருந்தார் அஷ்வின். இப்படியான வித்தியாசமான திரைமொழியால் ரசிகர்களை தன்னோடு கனெக்ட் செய்த அஸ்வின் இந்தமுறை நயன்தாராவோடு இணைந்து கனெக்ட் படத்தைக் கொடுத்துள்ளார். கனெக்ட் ஆகிறதா?
லாக்டவுன் காலத்தில் நயன்தாராவின் கணவர் வினய் இறந்துவிடுகிறார். அவரின் இழப்பு நயனின் மகளை உளவியல் ரீதியாகப் பாதிக்கிறது. அவள் தன் அப்பாவின் ஆவியோடு ஒயிஜா போர்ட் மூலமாக பேச நினைக்கிறார். அது அவளுக்குள் ஒரு தீய சக்தியை இறக்கிவிட.. அதை ஒரு கிறித்துவ பாதரியார் மூலமாக..ஆன்லைனிலே எப்படி விரட்டினார்கள் என்பதே கனெக்டின் கதை
நடிப்பில் நயனை விட அவரது மகள் கேரக்டரில் வரும் ஹனியா நஃபிஸா பின்னி பெடலெடுத்துள்ளார். சத்யராஜ் பதட்டத்தை உள்வாங்கிப் பயணிக்கும் தந்தையாக நடித்துள்ளார். சிறப்பாக நடித்தவர்களில் அனுபம் கேர் நடிப்பிற்கு முதலிடம். வினய் நான்கு காட்சிகளில் வந்தாலும் நச் என நெஞ்சில் பதிகிறார்
பிரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை தான் இப்படத்தின் ஆன்மா. ஒவ்வொரு காட்சிகளிலும் காட்சியின் கணத்தை உணர்ந்து இசை மீட்டியிருக்கிறார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சார்யாவின் ஒளிப்பதிவு இப்படத்திற்கு அசுரபலம். ஷாட் பை ஷாட் நம்மை உயிர்ப்போடு படம் பார்க்க வைத்துள்ளார் கேமராமேன். ரிச்சர்ட் கெவினின் எடிட் செம்ம ஷார்ப். அவர் வெட்டி ஒட்டிய காட்சிகள் தரும் திரில்லர் உணர்வு செம்ம. சவுண்ட் எபெக்ட், 5.1 மிக்ஸிங், ப்ராப்பரான CG. என டெக்னிக்கலாக இந்த கனெக்ட் அட்டகாசமாக கனெக்ட் ஆகிறது
ஆனால் ஆழமான கதை திரைக்கதை என்பது படத்தில் முழுதாக கை கூடவில்லை. மகளின் பாதிப்பு அறிந்தும் தக்காளி நறுக்குவதிலும் சமைப்பதிலுமே குறியாக இருக்கிறார் நயன். மகள் மேல் அவர் கொள்ளும் பிரியம் படத்திற்குள் நம்மை பாசத்தோடு பிணைக்க வேண்டுமல்லவா? அது நடக்கவேயில்லை. மகளைப் பிடித்துள்ள தீயசக்தியின் நோக்கம் என்ன? அந்தச் சக்தியின் ஆதி அந்தம் என்ன? என்பது துளியும் படத்தில் விளக்கப்பட வில்லை..அதனாலே கனெக்ட் நம்மிடமிருந்து விலகி நிற்கிறது. டெக்னிக்கலாக விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்தால் போதும் என்பவர்கள் Booking-ஐ கனெக்ட் செய்யலாம்
2.75/5
-மு.ஜெகன் கவிராஜ்