வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெற்றிபெற்ற படமே தமிழில் காலேஜ் குமாராக வந்திருக்கிறது. கல்வி என்பது உடலில் அணியும் உடைதானே தவிர அதுவே உடல் அல்ல என்பதையும், மேலும் கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதையும் வலியுறுத்தி சிறப்பு செய்திருக்கிறது காலேஜ் குமார்.
ஆடிட்டர் அவினாஷும் பிரபுவும் நண்பர்கள். படிக்காத பிரபு அவனாஷ் ஆபிஸில் கடைநிலை ஊழியர். தோழன் என்றும் பாராமல் ஒருநாள் அவினாஷ் பிரபுவின் தன்மானத்தை வச்சி செய்ய, வெகுண்டெழும் இளைய திலகம் புரட்சித்திலகமாய் மாறி தன் மகனை ஆடிட்டராக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி பலனளிக்காமல் போக அடுத்த முயற்சியை கையில் எடுக்கிறார். அது எப்படியான வெற்றியை ஈட்டியது என்பதே காலேஜ் குமார் திரைக்கதை.
நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பெரியண்ணன் போல மிக இயல்பாக ஈர்க்கிறார் பிரபு. உருகும் காட்சிகளிலும் வெடித்துச் சிரிக்கும் சிரிப்பை வரவைக்கும் காட்சிகளிலும் அசத்தி இருக்கிறார். பிரபுவின் மகனாக வரும் ராகுல்விஜய்க்கு படத்தின் கதைப்படி படிப்பு ஏறாத பாத்திரம். படத்திலும் ஒருசில இடத்தில் நடிப்பு ஏறாதது போல் தெரிந்தாலும் முடிவில் தேர்ச்சி அடைந்து விடுகிறார். பிரபுவின் மனைவியாக வரும் மதுபாலா கூடுமானவரை நல்ல நடிப்பை பாலோ பண்ண முயற்சிக்கிறார். அவினாஷ், நாசர், சாம்ஸ் ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். பிரியா வட்லமணி அழகாக வந்து போகிறார்.
படத்தின் இசையில் குதூப் இ கிருபா பெரிதாக சோபிக்கவும் இல்லை. சோடை போகவும் இல்லை. ஒளிப்பதிவாளர் குரு பிரசாத் ராய் தன் கடமையைச் சரியாகச் செய்துள்ளார்.
படத்தின் மேக்கிங்கில் 2கே கிட்ஸின் துள்ளல் இல்லாதது ஒருகுறை. 80-ஸ் கிட்ஸின் லா லா லா மேக்கிங் இந்த தலமுறைக்கு எந்தளவிற்குப் பிடிக்குமென்பது தெரியவில்லை. ஆனால் இன்றைய நெருக்கடி நிறைந்த வாழ்வில் இந்தக் காலேஜ் குமாரை ஹாய் சொல்லி வரவேற்கலாம் தான்!
-மு.ஜெகன்சேட்