Tamil Movie Ads News and Videos Portal

சியான்கள்-விமர்சனம்

மேகமலை அடிவாரத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் ஏழு முதியவர்கள், கூட்டுக்காரர்களாக ஒன்றாக இணைந்து ரகளை செய்து கொண்டுள்ளனர். தேனி வட்டாரத்தில், பெரியவர்களை சியான்கள் என்றழைப்பார்கள். ஏழு சியான்களின் நட்பு, தனிப்பட்ட வாழ்க்கை என்ற அட்டகாசமான கிராமியப் பதிவாக அமைந்துள்ளது இப்படம்.

சடையன், ஒண்டிகட்டை, மிலிட்டரி, செவ்வால, மணியாட்டி, ரஷ்யா, செவணாண்டி என்ற கதாபாத்திரங்களின் பெயர்களிலேயே மண் வாசமும், குசும்பும் எட்டிப் பார்க்கிறது. கல்யாணம் செய்து கொள்ளாமல் தன் காதலியை நினைத்தே வாழும் சியானை ஒண்டிகட்டை என்றும், முதுமையிலும் அடங்க மறுக்கும் வாலிப முறுக்கினை மனதில் சுமந்து திரியும் சியானுக்கு மணியாட்டி என்றும், கம்யூனிசம் பேசும் சிவப்பு துண்டுக்காரச் சியானை ரஷ்யா என்றும் காரணப்பெயரைச் சூட்டி சுவாரசியப்படுத்தியுள்ளார் இயக்குநர் வைகறை பாலன். ஒரு சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி, ஒரு சின்ன வசனம் வரை ரசிக்கவும் வைத்துள்ளார். ‘என் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க மாப்ள’ என்று சொல்லும் நளினிகாந்திடம், ‘அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். உங்க பொண்ணுகிட்ட என்னை ஒழுங்கா பார்த்துக்கச் சொல்லுங்க’ என்ற அவரது ஆதங்கத்திற்கு திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. படத்தின் பலமே, எளிமையான வசனமும், கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்புமுமே!

உள்நாக்கு பேசுவதை ஊர் கேட்குமா?
தள்ளாடி போன இந்த வேரும் தாங்குமா?

என்ற பாடலாசிரியர் முத்தமிழின் இந்த வரிகள்தான் படத்தின் பிரதான கரு. வீட்டிலுள்ளோர்களால் புறக்கணிக்கப்படும் முதியோர்களின் வலியை இப்படம் அழுத்தமாய்ப் பதிந்துள்ளது. “இது என்ன விதியோ?” என்ற பாடலின் மூலம் முத்தமிழ், பார்வையாளர்கள் மீது படம் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தை முழுமையாக்கியுள்ளது. பாடலெழுதிப் பாடி இசையமைத்துள்ள முத்தமிழ்க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளராக இது அவருக்கு முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக நாயகனாக நடித்துள்ள கரிகாலன் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக நாயகி ரிஷா ஹரிதாஸும் கதையின் தேவைக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். படத்தில் தெரிந்த ஒரே முகம் சியான் சடையனாக நடித்த நளினிகாந்த் மட்டுமே! ஆனால், அத்தகைய குறை ஏதுமில்லாமல் கதாபாத்திரங்கள் மிக இயல்பாக மனதில் பதிகின்றனர். சொத்துக்காக்க் கொல்லப்படுவது, ஒரு பிடிச் சோற்றுக்காகக் கொல்லப்படுவது, ஒரு தண்டட்டிக்காக யார் தகப்பனாரை வைத்து சோறு போடுவது என மகன்களுக்குள் நடக்கும் சண்டை என படம், சில காட்சிகளில் நம்மை மூச்சு விட முடியாமல் அடைக்கச் செய்தாலும், அதைக் கடந்து தங்கள் சிறியச் சிறிய கனவுகளை நோக்கி உற்சாக நடை போடும் சியான்களின் குதூகலம் நம்மைத் தொற்றிக் கொள்வது சிறப்பு.