மனம் நிறைக்கும் படைப்புகள் தமிழ்சினிமாவில் வெளியாவது ஒன்றும் புதிதல்ல! முள்ளும் மலரும் காலம்தொட்டே அவ்வப்போது நம் மனதை நிறைக்கும் படங்கள் வந்தபடி தான் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள படம் சித்தா. சித்தாப்பா என்பதன் ஷார்ட் பார்ம் தான் சித்தா
மறைந்த தன் அண்ணன் மகள் மீது உயிரையே வைத்திருக்கும் சித்தார்த். அவரின் நண்பன் வடிவேலு. வடிவேலுவிற்கும் தன் அக்கா மகள் மீது சொல்லவொண்ணா அன்பு. இந்த இரு சிறுமிகளுக்கும் ஏற்படும் பிரச்சனைகளும் அது சார்ந்த மெயின் கேரக்டர்களின் பயணமும் தான் சித்தாவின் கதை
சித்தார்த்திற்கு இப்படம் வாழ்நாள் பொக்கிஷம். இயல்பாக கதையோடு கலந்து விடுகிறார். ஈஸ்வரி வைஷ்ணவி கேரக்டர்களில் வரும் இரு சிறுமிகளும் அசத்தியுள்ளனர். அண்ணியாக வரும் கேரக்டர், சித்தார்த்தின் நண்பனாக வரும் கேரக்டர் முத்திரைப்பதித்துள்ளனர். நாயகி நிமிஷா சஜயன் அவரின் நடிப்பும் சிறப்பாக அமைந்துள்ளது
பாலாஜி சுப்பிரமணியனின் ஒளிப்பதிவு எல்லாக் காட்சிகளிலும் தடம் பதித்துள்ளது. அதுபோலவே இசை அமைப்பாளர்கள், திபு நிமன் தாமஸ், விஷால் சந்திரசேகர் இருவரும் இசையால் கதைக்கு கனம் சேர்த்துள்ளனர். டெக்னிக்கலாகவும் தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது இந்தச் சித்தா
ஒரு மெல்லிய உணர்வுடன் துவங்கும் படத்தை எமோஷ்னல் அதிர்வு கொஞ்சம் கூட குறையாமல் கடத்திச் செல்கிறது இயக்குநர் அருண்குமாரின் திரைக்கதை. கேரக்டர்கள் வார்ப்பிலும் சொல்லப்பட்ட மெசேஜ்லும் தனியாகப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துப் பாராட்டலாம் இயக்குநரை. பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை சமூகத்தின் முற்றத்தில் வைத்து விழிப்புணர்வு ஏற்றும் படங்களை நாம் உச்சிமுகர்ந்து கொண்டாட வேண்டும்!
4/5
-மு.ஜெகன் கவிராஜ்