‘பச்சை என்கின்ற காத்து’ படத்தை இயக்கிய கிரா, தற்போது சமுத்திரக்கனி, சாந்தினி, வீரா ஆகியோர் நடிப்பில் “பற” என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் தலைப்பு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், சென்சார் குழுவினரும் படத்தின் தலைப்பை மாற்றச் சொல்லி வற்புறுத்தினர். இல்லையென்றால் படத்திற்கு யு/ஏ சான்று தான் வழங்க முடியும் என்று உறுதியாக கூறிவிட்டனர்.
இதனால் தற்போது இப்படத்தின் தலைப்பு “எட்டு திக்கும் பற” என்று மாறியிருக்கிறது. இது குறித்துப் பேசிய இயக்குநர் கிரா, “நாட்டில் ஜாதியப் படுகொலைகள் அதிகரித்து வரும் சூழலில் ஆணவக் கொலைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. ‘பற’ என்பது ஒரு ஜாதிப் பிரிவின் பெயராகத்தான் இங்கு பார்க்கப்படுகிறது. அது பறத்தல் என்பதை பலரும் மறந்துவிட்டனர். ’பற’ என்பது ஜாதியத்தின் குறியீடு அல்ல. அது விடுதலையின் குறியீடு என்று தெரிவித்தார் இயக்குநர் கிரா.