நடிகர் விஷால் நடித்து தயாரித்துள்ள சக்ரா படத்தை இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார்.படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் நாளை பிப்ரவரி 19-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தொடர்ந்த காப்புரிமை தொடர்பான வழக்கு காரணமாக படத்தின் வெளியீட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது படத்தைத் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி “படத்தை வெளியிடலாம்…” என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சக்ரா திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளது.
இது குறித்து நடிகர் விஷால், “சினிமா உலகத்திற்கும், எனது தொழிலுக்கும், எப்போதும் நான் உண்மையாகவே இருந்திருக்கிறேன்.
தற்போது படத்தின் மீதான தடை நீக்கப்பட்டுவிட்டது. ‘சக்ரா’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. நாளைய தினமான பிப்ரவரி 19 ‘சக்ரா’ படத்திற்கு நல்ல நாள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் படம் வெளியாகிறது.
ஒரு தயாரிப்பாளருக்காக மட்டுமல்லாது, இந்தப் படம் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இது மகிழ்ச்சியான தருணம். சரியான நேரத்தில், உத்தரவை வழஙகிய உயர்நிதிமன்றத்திற்கு நன்றி.
நாளை திட்டமிட்டபடி ‘சக்ரா’ படம் வெளியாகும், வாய்மையே வெல்லும்…” என்று விஷால் தெரிவித்துள்ளார்.