ஆரம்பத்தில் ’அவர்களும் இவர்களும்’ ‘அட்டக்கத்தி’ ஆகிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், இன்று ஒரு குட்டி நடிப்பு இராட்சசியாகவே மாறி இருக்கிறார். வித்தியாசமான வேடங்கள் என்றாலே இயக்குநர்கள் துணிவுடன் பரிசீலிக்கும் பெயர் பட்டியலில் இடம் பெற்ற ஐஸ்வர்யா, இனி சிறிது காலத்திற்கு வயதிற்கு ஏற்ற வேடங்களில் மட்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். ‘காக்கா முட்டை’ யில் அம்மாவாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக, ’வானம் கொட்டட்டும்’ படத்தில் விக்ரம் பிரபு தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தியவர் ஏன் இந்த முடிவெடுத்தார் என்று கேட்டதற்கு, “ஆரம்பத்தில் இது போன்ற வேடங்களில் நடிக்கும் போதே சின்ன சந்தேகம் இருந்தது.
இது எதிர்காலத்தில் எனக்கு வரும் வாய்ப்புகளைப் பாதிக்குமோ..? என்று. ஆனால் ஆரம்பம் நன்றாகத் தான் சென்றது. ஆனால் சமீபகாலமாகத்தான் தொடர்ச்சியாக அம்மா, தங்கை போன்ற வேடங்களில் நடிக்கவே அழைப்பு வருகிறது. இது போன்ற வேடங்களில் நடிப்பதால் முன்னணி நாயகர்கள் என்னுடன் ஜோடியாக நடிக்க தயங்குவதையும் நேரிடையாக எதிர்கொண்டேன். இதனால் இனி சில காலங்களுக்கு வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன். இனி அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.