Tamil Movie Ads News and Videos Portal

பம்பர்- விமர்சனம்

மனிதம் போற்றும் ஓர் உன்னத சினிமா பம்பர்

தூத்துக்குடியில் திருட்டு வழிப்பறி என உருப்படும் வழியின்றி சுற்றும் ஹீரோ வெற்றி. அவரை கரையேற்றப் போராடும் ஒரு அம்மா. இவர்களின் திருட்டுக்களை தனக்காகப் பயன்படுத்தும் ஒரு போலீஸ் ஏட்டு! வெற்றியை மொத்தமாக நிராகரிக்கும் அவரது காதலியின் குடும்பம். இப்படியான சூழலில் நண்பர்களோடு வெற்றி சபரிமலைக்குச் செல்லும் சூழல் வருகிறது..அந்தச் சபரிமலையில் முஸ்லீம் முதியவரான ஹரிஸ்பேரடியிடம் ஒரு லாட்டரிச் சீட்டு வாங்குகிறார் வெற்றி. அந்த லாட்டரிச் சீட்டுக்குப் பத்துக்கோடி பம்பர் அடிப்பதும், அந்தப் பத்துக்கோடிக்குப் பின்னால் நடைபெறும் அகவழி போராட்டங்களும் தான் படத்தின் கதை

வெற்றி மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்து பாஸ்மார்க் வாங்குகிறார். படத்தின் ஒட்டுமொத்த ஜீவனையும் தன் அடர்ந்த தாடிக்குள்ளும், தன் அட்டகாச நடிப்பாலும் தாங்குகிறார் ஹரிஸ்பேரடி..இந்த வருடம் ஹரிஸ் பேரடி எனும் மகத்தான நடிகருக்கு விருதுகள் நிச்சயம்! போலீஸ் ஏட்டாக வரும் கவிதாபாரதி பட்டையக் கிளப்பியுள்ளார். வன்மும் குரூரமும் நிறைந்த கேரக்டரை தன் முகபாவங்கள் வழியே அழகாக வெளிப்படுத்தியுள்ளார்..ஹீரோயின் ஓகே ரகம். தங்கதுரை உள்ளிட்ட நண்பர்கள் கேரக்டர்கள் அனைவரும் பக்கா பொருத்தம். மேலும் தூத்துக்குடி மண்வாசனை மாறாத பல கேரக்டர்கள் அதிரிபுதிரியாக ஸ்கோர் செய்கின்றன. படத்தின் ஆகப்பெரும் பலம் கதாப்பாத்திர வார்ப்புகள் எனலாம். இயக்குநர் செல்வகுமார் முதல் சிக்ஸர் அடித்த இடம் இது

கோவிந்த் வசந்தா கார்த்திக் நேத்தா கூட்டணி அட்டகாசமான பாடல்களை கொடுத்துள்ளது. பின்னணி இசையில் கதையின் ஜீவன் இன்னும் ஆழப்படுகிறது. வினோத் ரத்னசாமியின் ஒளிப்பதிவுக்கு ஒரு தனிப்பதிவே எழுதலாம். எந்த மாயாஜாலத்தையும் நிகழ்த்தாமல், அந்தந்த நிலப்பரப்பின் அழகியலை அப்படியப்படியே அழகாக காட்டியுள்ளது அவரது கேமரா.

வாய்ப்பு கிடைத்தும் தவறுக்கு துணைபோகாத மனிதர்களால் தான் இந்த பூமி இன்னும் அழகாக ஜீவித்திருக்கிறது என்று சொல்ல வைக்கிறது படத்தின் க்ளைமாக்ஸ். ஒவ்வொரு காட்சியின் முடிவுக்குப் பின்னால் இருக்கும் லீட், அடுத்த காட்சியின் தொடக்கத்தில் இருக்கும் சின்ன எதிர்பார்ப்பு என அழகான கதை சொல்லல் முறையை கையாண்டுள்ளார் இயக்குநர் செல்வகுமார். முஸ்லீம், இந்து, சாதி, மாநிலம் என நிறைய குறியீடுகள் இருந்தாலும் எந்த இடத்திலும் யாரையும் தாழ்த்தாமல் சமநிலை பேணியிருப்பதில் தெரிகிறது இயக்குநரின் அறம் சார்ந்த அரசியல். நேர்மை தான் உலகிலே ஆகப்பெரிய அதிர்ஷ்டம் என்பதை பம்பர் நம் இதயத்திற்கு அருகில் வந்து சொல்கிறது. அவசியம் திரையரங்கில் சென்று பாருங்கள்!

4/5
-மு.ஜெகன் கவிராஜ்

#BUMPER #பம்பர்