தமிழ் சினிமாவில் ஒரு கதையை எடுப்பதற்குப் பலர் போட்டி போடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கையை ஏ.எல்.விஜய், ப்ரியதர்ஷிணி, கெளதம் மேனன் என மூவரும் படமாக்க மோதிக் கொண்டனர். அதுபோல் பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்க, ரஜினியின் இளையமகள் செளந்தர்யா அதை வெஃப் சீரிஸாக மாற்ற முயன்று
வருகிறார். அது போல் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேல.ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை அடிப்படையாகக் கொண்டு யார் படம் செய்வது என்பதில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலா இருவருக்கும் இடையில் போட்டி ஏற்பட்டது. பாரதிராஜா தொடங்கிய திரைப்படம் பூஜையோடு நின்று போனது. தற்போது மீண்டும் அதை பாரதிராஜா கையிலெடுத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இப்படத்தை வெஃப் சீரிஸாக வெளியிடவிருக்கிறார். நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.