சின்னத்திரை நட்சத்திரமாக இருந்து ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக உயர்ந்த ப்ரியா பவானி சங்கருக்கு தற்போது மார்க்கெட் நல்ல உச்சத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக வெளியாகும் படங்கள் மற்றும் பூஜை போடப்படும் படங்களில் பெரும்பாலும் அவர் பெயர் அடிபடுகிறது. தற்போது ‘மாபியா’ படத்தில் அதிரடி வேடத்தில் நடித்ததைத் தொடர்ந்து, இனி குடும்பப்பாங்கான வேடம் தவிர்த்து அதிரடியான வேடங்களும் தன்னை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கிறாராம்.
தற்போது ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. கார்த்திக் சுந்தர் இயக்கி இருக்கும் இப்படம் குறித்து ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருக்கும் பவானி, “என் வாழ்க்கையின் மிக அழகான நாட்கள். அழகான தருணங்களையும் அன்பையும் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவரையும் நான் மிஸ் செய்வேன். உங்கள் அனைவரையும் மீண்டும் விரைவில் சந்திப்பேன்” என்று கூறியிருக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பெல்லி சுப்புலு படத்தின் ரீமேக் ஆகும்.