சீன மொழியில் உருவாகும் “பாபநாசம்” திரைப்படம்
ஜோதிகா, கார்த்தி அக்காள் தம்பியாக நடித்திருக்கும் “தம்பி” படத்தை இயக்கிய இயக்குநர் ஜூத்து ஜோசப் மலையாளத்தில் முதன் முதலில் இயக்கியத் திரைப்படம் “த்ரிஷ்ஷியம்”. மோகன்லால் மீனா நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற இந்தத் திரைப்படம் தான் பின்னர் தமிழில் பாபநாசமாக மாறியது. அதில் கமல், கவுதமி இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி என இந்திய மொழிகள் பலவற்றில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது இப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 20ம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. மானம் மற்றும் உயிரைக் காக்க தன் மகளும் மனைவியும் சேர்ந்து செய்த கொலையை கணவன் எப்படி சாதுர்யமாக போலீஸிடம் இருந்து மறைத்து தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறான் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படம் சீன மொழியில் “தி ஷிப் வித் அவுட் தி ஷெப்பர்டு” என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. மலையாளத்தில் இருந்து முதன்முறையாக ரீமேக் செய்யப்படும் திரைப்படம் என்னும் பெருமையை இப்படம் பெற்றிருக்கிறது.