ரஜினிகாந்த் என்பவர் ஆல்வேஸ் அபூர்வமானவர். 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடவைச் சந்தித்த படம் பாபா. ரஜினிகாந்தின் வெற்றிகரமான திரைப்பயணத்தில் பாபா ஓர் கரும்புள்ளி. ஆனால் அப்படியான படத்தை இப்போது ரீ ரிலீஸ் செய்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான ரஜினிகாந்த்.
ஆன்மிகமும் கமர்சியலும் கலந்த இக்கதையின் க்ளைமாக்ஸையும், வேறுபல காட்சிகளையும் வெட்டியிருக்கிறார்கள். மற்றபடி கலர் கரெக்ஷன்ஸ் கொஞ்சம் செய்து படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.
மக்களோடு மக்களாக கூலி வேலை செய்து வாழும் ரஜினி கடவுள் நம்பிக்கை அற்றவர். அவர் ஒரு அபூர்வ பிறவி என ஒரு கட்டத்தில் அவருக்கு உணர்த்தப்பட இமயமலை சென்று பாபாஜியைச் சந்திக்கிறார் ரஜினி. அங்கு அவருக்கு ஐந்து மந்திரங்கள் (பழைய வெர்சனில் ஏழு மந்திரங்கள்) கொடுக்கப்பட அதை வைத்து ரஜினி என்னவெல்லாம் செய்தார் என்பதை திரைக்கதையாக விரிகிறது.
20 வருடங்களுக்கு முன்னுள்ள ரஜினியை இன்று அகண்ட திரையில் காண்பதே பேரனுபவம் என்பதால் படம் பார்க்கும் போது நமக்குள் ஒரு எனர்ஜிடிக் பரவுகிறது. ஆனால் ரஜினியின் தோற்றம், ரொம்ப பழைய பார்மட்டான வசன மாடுலேசன்ஸ் சற்று சோர்வடையச் செய்கிறது. மனிஷா கொய்ரலா, கவுண்டமணி, சுஜாதா, நம்பியார், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட எல்லா நடிகர்களும் பாபாவின் பலம்
ஏ.ஆர் ரகுமான் படத்தின் மற்றொரு ஹீரோ. அவர் பாடல்கள் வழியாக கொடுத்துள்ள எல்லாமே பாபாஜி மந்திரங்களை விட மாஸ். ஒளிப்பதிவில் இப்போது நிறைய டெக்னாலஜி ஷாட்ஸ் வந்துவிட்டதால் அப்போதைய ஒளிப்பதிவைப் பற்றி தனிப்பதிவாக எழுத ஏதுமில்லை
ஆசை தான் மாயை. ஆசை துறந்தால் ஆசை தீர வாழலாம் என்ற கருத்தாக்கத்தை முன் வைக்கும் பாபா, ஊழ்வினை நிஜம் என்பதையும் போதிக்கிறது. நிறைய போதிமர கருத்துக்களும், எதார்த்தத்தை சொல்லும் தரிசனமும் படத்தில் நிஜமாகவே கனெக்ட் ஆகிறது. ஆனால் அவற்றை கமர்சியலோடு மிக்ஸ் செய்ததில் தான் பாபா பலவீனமாக தெரிகிறார். மற்றபடி கமர்சியல் விசயங்களை மறந்துவிட்டு படம் பேசும் ஆழமான ஆன்மிகத்தைப் பார்த்தால் பாபா ஓர் தரிசனம் தான்
-மு.ஜெகன் கவிராஜ்
3/5