சுமக்க முடியாதவற்றை “பாரமா இருக்கு” என்பார்கள். உடலால் மட்டும் அல்லாமல் மனதால் சுமக்க முடியாதவற்றையும் பாரம் என்பார்கள். வீட்டில் உடலால் எதுவும் செய்ய முடியாமல் பெரியவர்கள் படுத்தப் படுக்கையாகி விட்டால் அவர்களை பாரம் என்றெண்ணி ஓரமாக வைத்துவிடுவது பல குடுபங்களில் வழக்கமாக நடந்து வரும் ஒன்று. சில இடங்களில் அவர்களை கருணைக் கொலைச் செய்துவிடும் கொடுமையும் நடந்து வருகிறது. அதைத்தான் பாரம் படம் பேசியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆவணப்படம் என்ற ரேஞ்சில் தான் படத்தின் மேக்கிங் இருக்கிறது. ஆனால் பேசியுள்ள விசயம் ரொம்ப வீரியமான ஒன்று.
உடம்புக்கு முடியாமல் படுத்திருப்பவர்களை இப்படிக் கொல்வதை புண்ணியச் செயல் எனக்கருதும் கொடூர மனிதர்களும் நாட்டில் இருக்கிறார்கள். அது அவர்களுக்குத் தரும் விடுதலை என்று வியாக்கியானம் சொன்னாலும் அந்த விடுதலையை அந்த மனிதன் விரும்புகிறானா என்பது எவ்வளவு முக்கியம். பாரம் படத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைத் தான் தன் மகனே கொலை செய்கிறான்.
அதை எதிர்த்து அப்படி நடக்கும் விசயங்களை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வருகிறான் இறந்து போனவரின் தங்கை மகன். துன்பத்தில் இருப்பவனுக்கு விடுதலை அளிக்கிறேன் என்ற பெயரில் அவன் உயிரை எடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம் என்பதை உணர்ந்து அவன் இதைச் சட்டரீதியாக அணுக நினைக்கும் போது அவன் பின்னால் அம்பேத்கர் போட்டோ இருப்பது அத்தனைப் பொருத்தம்.
தாய்மாமா மீது எல்லாப் பையன்களுக்கும் ஓர் இனம்புரியாத பேரன்பு இருக்கிறது. பாரத்தில் அதைக் காணும்போது மனம் இனம் புரியாத சோகமும் மகிழ்வும் வந்துபோனது.
மகன் செய்ய வேண்டிய கடமைகளை தங்கச்சி மகன்கள் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கெளரவம் கருதி மகன் மறுத்து விடுகிறார்.
“பாயிலே பீயும் மோளுமா கெடக்கா கிழவி. ஐப்பேசி அடமழ நேரத்துல ரெண்டு எளனிய கொடுத்து சோலிய முடிக்கணும்” என்று சர்வ சாதாரணமாகச் சொல்பவர்களை நிறையப் பார்த்திருந்தாலும் காட்சி வடிவில் அதைப் பார்க்கும் போது மனசே கேட்கல.
படத்தில் கருணைக்கொலைக்குஉள்ளாகும் கேரக்டர் கருப்பசாமி, அவரைக் கொல்லும் மகன் கேரக்டர் பெயர் செந்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் பார்த்தால் தெரியும். ஆக இது ஒரு மதத்தில் மட்டும் தான் நடக்கிறது, தமிழ்நாட்டுல மட்டும் தான் இப்படி நடக்கு என்பது போல் படம் சொல்லவில்லை. ஆனாலும் உலகெங்கும் இப்படி நடக்கு என்பதைச் சொல்லாமல் விட்டதால் இப்படம் சிறிய விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். அந்த விமர்சனங்கள் படத்திற்கு பாசிட்டிவாக அமைந்தால், இந்தப் படத்திற்கு கிடைத்த தேசியவிருதை விட அது பெரிய லாபமாக இருக்கும்.
இருந்தாலும் கேப் கிடைக்கும் போது மட்டும் அல்லாமல் கேப்பே இல்லாமல் இருந்தாலும் ஒரு கேப்-ஐ உருவாக்கி தமிழர்களை வச்சி செய்யும் சூழலில், தமிழ்நாட்டிற்கு, “கருணைக் கொலைகளை ஆதரிக்கும் சமூகம்” என இப்படியொரு புது முத்திரை தேவையா? என்ற கேள்வியையும் மறுத்திட முடியாது