Tamil Movie Ads News and Videos Portal

அழகிய கண்ணே- விமர்சனம்

“சினிமாவில் உதவி இயக்குநராக இருப்பவனுக்கு இரவெல்லாம் பட்டினி கிடந்தாலும் காலையில் ஏப்பம் விடத் தெரியவேண்டும்” என்று வைரமுத்து ஒருமுறை சொல்லியிருந்தார். சினிமாவில் உதவி இயக்குநர்களின் வாழ்வு அத்தகைய வாதை நிறைந்தது. ஆனால் அந்த வாதைகளை தாங்கிக் கொண்டு உற்சாகம் குன்றாமல் கனவுகளை சுமந்தபடி எத்தனையோ இளைஞர்கள் கோடம்பாக்கத்து வீதிகளில் சுற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படியான உதவி இயக்குநர்களின் வாழ்வில் எக்கச்சக்கமான கதைகள் உண்டு. அதில் ஒரு கதை தான் அழகிய கண்ணே படம்.

நாயகன் லியோ சிவக்குமார் திண்டுக்கல் மாவட்டத்தில் புரட்சி நாடகம் போட்டுக்கொண்டு திரிகிறார். அவரின் ஒரே லட்சியம் இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து பின் தானொரு இயக்குநராக வேண்டும் என்பதே. அந்த லட்சியத்திற்கு இடையில் காதல்,கல்யாணம் குழந்தை, குடும்பம் எனவும் கதை பயணிக்கிறது

லியோ சிவக்குமாருக்கு இது அறிமுக படம் என்பதால் அவரது நடிப்பில் சிறுசிறு குறைகள் தென்படுவது சகசம் தான். ஆனால் பல இடங்களில் ஒரு நல்ல நடிகராக வருவதற்கான அமைப்பு அவரிடம் இருக்கிறது என்பதை உணர முடிகிறது. சஞ்சிதா ஷெட்டி இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் சில கேரக்டர்கள் மனதில் பதிகிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஜய்சேதுபதி படத்திற்கே சிறப்பு சேர்த்துள்ளார். இயக்குநர் பிரபு சாலமோனும், சினிமா & வாழ்வு பற்றிய எதார்த்தத்தைச் சொல்லும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.

ரகுநந்தனின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை ஸ்கோர் செய்கிறது. ஒளிப்பதிவில் மிகையில்லாததால் படத்தை ரசிக்க முடிகிறது

அறிமுக இயக்குநர் விஜய்குமார் எழுதி இயக்கியுள்ளார். முதல் படம் என்பதால் பல்வேறு விசயங்களைக் கதைக்குள் கொண்டு வந்துள்ளார். ஒருசில விசயங்கள் அவற்றில் நன்றாகவே எடுபட்டுள்ளது. முக்கியமாக இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர்களின் மனநிலையை படம் பிடித்து காட்டியிருப்பது ஆகச்சிறப்பு. இன்னும் ஒரு சில இடங்களில் திரைக்கதையில் மேஜிக் காட்டியிருந்தால் படம் அதிரிபுதிரியாக அமைந்திருக்கும். என்றாலும் இந்த வார இறுதியை குடும்பத்தோடு கழிக்க உறுதியான உத்திரவாதம் தருகிறது அழகிய கண்ணே

3/5
-மு.ஜெகன் கவிராஜ்

#AzhagiyaKanne #அழகியகண்ணே